Advertisment

இறைப்பணியாற்ற மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் - தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி

ஆனால் சில மாதங்கள் கழித்து, கோவில் பணி ஏதும் தர முடியாது. மாறாக அன்னதானம் அல்லது கோவிலில் தூய்மைப் பணியாளர் பணி, இதில் எதையாவது தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்தவர் என்பதால் எனக்கு இந்த பணிகளை ஒதுக்கினார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் அன்னதான பணிகளை மேற்கொண்டேன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Angayarkanni, first female odhuvar, trichy,

female Odhuvar Angayarkanni : நான் விதைத்த விதை தான் இன்று மரமாகி இருக்கிறது. சுஹாஞ்சனாவிற்கு இந்த இறைப்பணி ஆற்றும் வாய்ப்பு விரைவில் கிடைத்துவிட்டது. ஆனால் நானோ, ஓதுவார் பணியை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று பலருக்கும் மனுக்கள் எழுதி காத்திருந்தேன். என் வரிசையில் இன்று சுஹாஞ்சனா இந்த பொறுப்பை ஏற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆரம்பித்தார் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி.

Advertisment

2006ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு அதில் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவராக நியமிக்கப்பட்டவர் 39 வயதாகும் அங்கயற்கண்ணி. திருச்சி மாவட்டம் உறையூரில் அமைந்திருக்கும் அருள்மிகு பஞ்சவர்ணசாமி திருக்கோவிலில் நான் ஓதுவராக 2006ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். 6 ஆண்டுகள் ஆன பிறகு குடும்ப சூழல் காரணமாக திருச்சியில் இருந்து நான் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

இறைப்பணி ஆற்ற தான் வந்தேன். இருப்பினும், கையில் ஒரு குழந்தையுடன், என் வாழ்வை மேலே வழிநடத்தி செல்வதற்கு ஏற்ற வகையில் ஓதுவார் பணி மூலம் எனக்கு வாழ்வாதாரம் கிடைக்கவில்லை. விரைவில் இந்நிலை மாறிவிடும் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படி ஏதும் மாறவில்லை. வீட்டு வாடகைக்கு கூட, ஓதுவார் பணி மூலம் கிடைத்த வருமானம் போதுமானதாக இருக்கவில்லை. குழந்தைக்கு உணவு, அவளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் நினைத்து தான் அங்கிருந்து வெளியேறினேன். நாமக்கலின் எனுடைய கணவருடன் சில காலம் வாழ்ந்து வந்தேன்.

ஆனாலும் இறைப்பணி செய்வதே என்னுடைய பிறவிக்கான அர்த்தம் என்று நான் உணர துவங்கியதும் நான் மீண்டும் உறையூருக்கே வந்தேன். ஆனால் எனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்கப்படவில்லை. இறைத் தொண்டே போதுமென நினைத்து நான் கோவிலில் உள்ள மற்ற பணிகள் அனைத்தையும் செய்து வந்தேன். அதற்கு சம்பளமாக ரூ. 2000 மட்டுமே அளித்தனர். ஆனால் சில மாதங்கள் கழித்து, கோவில் பணி ஏதும் தர முடியாது. மாறாக அன்னதானம் அல்லது கோவிலில் தூய்மைப் பணியாளர் பணி, இதில் எதையாவது தேர்வு செய்யுங்கள் என்று கூறினார்கள். நான் தாழ்த்தப்பட்ட பிரிவை சார்ந்தவர் என்பதால் எனக்கு இந்த பணிகளை ஒதுக்கினார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் அன்னதான பணிகளை மேற்கொண்டேன் என்று ஆதங்கத்துடன் பேசினார் அங்கயற்கண்ணி.

என்னைப் போன்று பலரும் திருமுறை கற்க வேண்டும் – ஓதுவார் சுஹாஞ்சனாவுடன் நேர்காணல்

2001ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த அங்கயற்கண்ணி 3 வருடங்கள், மாவட்ட இசைப்பள்ளியில் பன்னிரு திருமுறைகளை கற்றுத் தேர்ந்தார். 2006ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தின் போது அங்கயற்கண்ணிக்கு உறையூர் கோவிலில் ஓதுவார் பணி கிடைத்தது. திருமணம் ஆன பிறகும் கூட கணவரின் ஊருக்கு செல்லாமல் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் இறைப்பணி ஆற்றி வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு ரூ. 1500 சம்பளமாக நியமிக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அது ரூ. 1875- ஆக அதிகரித்து வழங்கப்பட்டது. அதன் பின்னர் சம்பள உயர்வு ஏதும் கிடைக்கவில்லை என்று தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

என்னைப் போன்று மற்ற பெண்களும் ஓதுவார் பயிற்சி பெற வேண்டும். கோவில்களில் கடவுள்களுக்கு பன்னிரு திருமுறைகள் பாட வேண்டும் என்ற ஊக்க சக்தியாக நான் செயல்பட விரும்பினேன். தொலைக்காட்சியில் சுஹாஞ்சனாவை பார்த்த போது நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறிய அவரிடம், நீங்கள் மீண்டும் ஏன் பணிக்கு வரவில்லை என்ற கேள்வியை கேட்டோம்.

2019ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பு அன்னதானத்தில் தான் பணியாற்றினேன். ஆனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பிறகு மீண்டும் கோவிலுக்கு சென்ற போது, வேலை ஏதும் இல்லை என்று கூறவும் என்ன செய்வது என்று அறியாமல் நான் வீடு திரும்பிவிட்டேன். முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளேன். எனக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்தால் அதில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் அங்கயற்கண்ணி தெரிவித்துள்ளார்.

 1971ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. ஆனால் அன்று அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் கழித்து இந்த திட்டத்தை அவரின் அரசியல் வாரிசும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். “உரிய தகுதியும் பயிற்சியும்” பெற்ற எந்த நபரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-ல் திமுக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன் கீழ் சிலர் நியமிக்கப்பட்ட போதிலும் அதன் பிறகான காலங்களில் போதுமான நியமனங்கள் இல்லாத காரணத்தால் பணி நியமனத்திற்கு பலரும் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 100வது நாளில் 20 ஓதுவார்கள் மற்றும் 24 அர்ச்சகர்களுக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். பத்தாண்டுகளுக்கு பிறகு பதவி ஏற்றிருக்கும் திமுக ஆரம்பம் முதலே கோவில் மற்றும் அறநிலையத்துறை விவகாரங்களில் பல முக்கிய முன்னெடுப்புகளை ஏற்று நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே கோவில் நிலங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை என்று பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வரிசையில் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 100வது நாளில் 20 ஓதுவார்கள் மற்றும் 24 அர்ச்சகர்களுக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Female Odhuvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment