பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா... தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது: அன்புமணி

இது ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றும் பெருஞ்சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

பாலாற்றை பயன்படுத்தி ஆந்திரத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றும் அதேநேரத்தில், தமிழகத்தை வறண்ட பாலைவனமாக மாற்றும் நோக்கத்துடன் தான் ஆந்திர அரசு செயல்பட்டுவருகிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணையை கட்டும் பணிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி ஆந்திராவில் ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றவும் அம்மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள கங்குந்தியை அடுத்த பாலாறு கிராமத்தில் தமிழகத்தையும், ஆந்திரத்தையும் இணைக்கும் வகையில் தரைப்பாலம் இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்த ஆந்திர அரசு, அந்த மேம்பாலத்திற்கு கீழ் 36 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கதவுகளுடன் கூடிய தடுப்பணையைக் கட்டி வருகிறது.

 இந்த தடுப்பணைக் கட்டப்பட்டால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இது தவிர பொகிலிரே பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 15 அடியிலிருந்து 36 அடியாக உயர்த்தவும், கங்குந்திக்கும், கணேசபுரத்திற்கும் இடையில் இன்னொரு தடுப்பணை கட்டவும்  ஆந்திர அரசு முடிவு செய்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

கடந்த 33 நாட்களாக இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இதே காலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மூன்று தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

பாலாற்றின் துணை ஆறுகளின்  குறுக்கே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் புதிதாக கட்டப்பட்டன. ஆனால், இவற்றை எல்லாம் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. இதனால் துணிச்சல் பெற்ற ஆந்திர மாநில அரசு மேலும் மேலும் தடுப்பணைகளை கட்டி வருகிறது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக தடுப்பணைகளை கட்டுவதை தனித்த நிகழ்வுகளாகப் பார்க்கக் கூடாது. இது ஒட்டுமொத்த பாலாற்றையும் அணையாக மாற்றும் பெருஞ்சதித் திட்டத்தின் ஓர் அங்கமாகும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது குப்பம் தொகுதியையும், அதை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தையும் வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார். இதற்காக கிருஷ்ணா ஆற்றை குப்பம் தொகுதியில் உள்ள நீர்நிலைகளுடன் இணைக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு செயல்படுத்தி வருகிறார். இந்தப் பணிகள் வெகுவிரைவில் முடிவடையும் என கூறப்படுகிறது. 

அவ்வாறு கொண்டு வரப்படும் கிருஷ்ணா ஆற்றுநீரைக் கொண்டு குப்பம் தொகுதியில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பிய பிறகு மீதமுள்ள நீரை பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 22 தடுப்பணைகளை மூலம் தடுத்து வைப்பது தான் ஆந்திர அரசின் திட்டமாகும்.

அதாவது ஆந்திரத்தில் பாலாறு 33 கி.மீ. தூரம் ஓடுகிறது. அதன்குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீரை  தேக்கி வைப்பதன் மொத்தம் 33 கி.மீ நீளமும், 36 அடி உயரமும் உள்ள அணையாக பாலாறு மாற்றப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, இவ்வாறு தேக்கி வைக்கப்படும் நீரை நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உழவர்களுக்கு மின்சாரமும், நீரிறைப்பான்களும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

பாலாற்றை பயன்படுத்தி ஆந்திரத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றும் அதேநேரத்தில், தமிழகத்தை வறண்ட பாலைவனமாக மாற்றும் நோக்கத்துடன் தான் ஆந்திர அரசு இவ்வாறு செய்கிறது. பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து  அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் இராஜதானிக்கும் இடையே 1892-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளை கட்டக்கூடாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளை கட்டுவதும், ஏற்கனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும்.

பாலாற்றில் தடுப்பணைகளை கட்டும் பணி முடிவடைந்தால் பாலாறு பாலைவனமாகவே மாறி விடும். பாலாறு மாநிலங்களிடையே பாயும் ஆறு (Inter -State Rivers ) என்பதால் இந்த விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பாலாற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதை செய்ய மத்திய, மாநில அரசுகள் தவறினால், விவசாயிகளில் நலனை பாதுகாப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று தடுப்பணை பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி முறியடிக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close