மது குடிக்கும் சிறுவர்கள் படம் வெளியானால், தாமாகவே வழக்கு பதிவு : போலீசாருக்கு ஐகோர்ட் அறிவுரை

சிறுவர்கள் மது குடிப்பது போன்ற டம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானால், அதிகாரிகள் தாமாகவே வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற அறிவுரை வழங்கியுள்ளது. 

சிறுவர்கள் மது குடிப்பது போன்ற புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானால் அது குறித்து தாமாகவே வழக்கு பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற அறிவுரை வழங்கியுள்ளது. 
  
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் புதிதாக டாஸ்மாக் மதுகடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் ஜாமினில் விடுதலை செய்யவும் அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டும் அந்த உத்தரவை முறையாக செயல்படுத்தவில்லை என புகார் தெரிவிக்கபட்டது. இதனை தெடர்ந்து, நீதித்துறை மற்றும் சிறைத்துறை இடையேயான தொலைத்தொடர்பு வசதிகளை மேம்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அது தொடர்பான வழக்கை விசாரித்த வருகின்றது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நவீன சிறை விதிமுறைகள் தமிழக அரசால் ஏற்கபட்டதா? கைதிகள் தொடர்பாக அறிவுரை கழகங்களில் ஆலோசனைகள் பெறப்படுகிறதா? தமிழகத்தில் எத்தனை ஆண்கள், பெண்கள் சிறை கைதிகள் கைதிகளாக உள்ளனர்? அவர்கள் மீண்டும் தவறிழைக்காத வகையில் எத்தனை மனநல மருத்துவர்கள் மற்றும் மனநலஆலோசகர்கள் இருக்கிறார்கள்?  7  மற்றும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களின் விவரங்கள் மாநில அறிவுரை கழகத்துக்கு தெரிவிக்கப்படுகிறதா? தண்டனை பெற்ற கைதிகளின் சொத்துகளின் நிலை என்ன? நகரின் முக்கிய பகுதிகளில் கோடிக்கணக்கான சொத்துக்கள் அவர்களுக்கு இருக்குமேயானால் அவற்றின் நிலை என்ன? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், ’தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதாகவும், பேரவை கூட்டத்தொடர்  முடிந்தவுடன் அனைத்து  விவரங்களை அரசிடம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம்’ என கூறினார்.

அப்போது நீதிபதிகள், ’சிறைகளில் நடத்தபடும் மக்கள் மன்றங்கள் முறையாக நடத்தப்படுகிறதா? கடைசியாக எப்போது நடத்தப்பட்டது? அங்கு  எவ்வளவு வழக்குகள் தீர்வு காணபட்டுள்ளது?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ’இது தொடர்பாக சிறை நிர்வாகத்தின் விளக்கத்தை அறிந்து பதில் அளிக்க கால அவகாசம் தேவை’ என கூறினார்.

நீதிபதிகள் : தமிழகத்தில் டாஸ்மாக் எதிரான மக்கள் போராட்டங்களை சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது. அரசியல் கட்சிகள் போல முன்கூட்டியே பொதுமக்கள் திட்டமிட்டு போராட்டம் நடத்துவதில்லை. மக்கள் தன்னெழுச்சியாக நடத்தும் போராட்டம் தான் இது. இப்போது டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் இரண்டு தலைமுறைக்கு பின்பு வருபவர்களாவது காப்பாற்றப்படுவார்கள். ஏனெனில் இரண்டு தலைமுறை அளவுக்கு டாஸ்மாக் விஷம்போல் கலந்துள்ளது. அண்மை காலத்தில் சமுக வலைதளங்களில் சிறுவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவது போன்ற வீடியோ மற்றும் போட்டோ வெளிவந்து வருகின்றது. எனவே இது தொடர்பாக புகார் வரும்வரையெல்லாம் காத்திருக்காதீர்கள். சிறுவன் போய் மதுபானம் வாங்கினால் அடுத்த சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் வெளியாகிறது. அதனடிப்படையில் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என கருத்து தெரிவத்தனர்.

மது விற்பனையை அரசு இலக்கு வைத்து விற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இது வேதனை
தருவதாகவும் கருத்து கூறினர். இந்தாண்டு தீபாவளி விற்பனை டார்கெட் எவ்வளவு? எனவும் கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில் பதில் அளித்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி, ’எப்போதும் மதுவிற்பனையில் இலக்கு  (டார்கெட்டெல்லாம்) வைப்பதில்லை’ என தெரிவித்தார்.

நீதிபதிகள் : கைதிகளின் ஆதார் எண்களும் கணக்கெடுக்கப்படுவதால், எங்கு குற்றம் நடந்தாலும், செய்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில்
நீதிமன்றத்துக்கு உதவும் நண்பனாக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை நியமிக்கிறோம். அவர் தமிழக சிறைகளுக்கு சென்று எத்தனை ஆண்கள், பெண்கள் சிறை கைதிகள் உள்ளனர்? அவர்கள் மீண்டும் தவறிழைக்காத வகையில் எத்தனை மனநல மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும். தேவைப்பட்டால் சிறைக்கு சென்று நாங்களும்  ஆய்வு செய்வோம்.

அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஜூலை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close