ஐஐடி மாணவர்கள் கோரிக்கை நிராகரிப்பு; மீண்டும் வலுப்பெறும் போராட்டம்!

சூரஜை தாக்கிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்....

கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி இறைச்சி மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்புக்காக மாடு, கன்றுக் குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தது.

இதனையடுத்து, சென்னை ஐஐடியில் சூரஜ் எனும் மாணவர், மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக மாட்டிறைச்சி சாப்பிடும் திருவிழாவினை நடத்தினார். சுமார் 80 மாணவர்கள் இணைந்து இந்த மாட்டிறைச்சி நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மாட்டிறைச்சி உணவு வகைகளை ஹோட்டலில் வாங்கிவந்து வளாகத்தின் உள்ளேயே இணைந்து சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த பிஹெச்டி மாணவர் சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வலது கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, ஐஐடி வளாகத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முழங்கி வருகின்றனர். அப்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார் திராவிட கழகத்தினர் அங்கு மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால், போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து,  இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த யாரேனும் இரண்டு மாணவர்கள் வரலாம் என ஐஐடி டீன் சிவக்குமார் அழைப்புவிடுத்தார். இதையடுத்து, தாக்கப்பட்டவர்கள் தரப்பினரும், தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்நிலையில், மாணவர்களுடன் டீன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது, தாக்கப்பட்ட மாணவர் சூரஜின் மருத்துவ செலவு முழுவதையும் ஐஐடி நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும், சூரஜை தாக்கிய மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க டீன் மறுத்துவிட்டார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, விசாரணை குழு ஒன்று அமைக்கவும் அவர் உத்தரவிட்டுளளார்.

இதனையடுத்து, மாணவர்களின் கோரிக்கையை டீன் ஏற்க மறுத்துவிட்டதால், போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close