‘இசைப் புலமையால் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தவர் இளையராஜா’ ஓபிஎஸ், ராமதாஸ், விவேக் வாழ்த்து

இசைப் பிரியர்களின் ரேஷன் கார்டிலும் இல்லாத, ஆனால் இதயங்களில் இருக்கின்ற பெயர் ‘இளயராஜா’75’ என கூறியிருக்கிறார் விவேக்.

இளையராஜா பிறந்தநாள் விழாவையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. இசை ரசிகர்களின் இதயங்களில் இளையராஜா பெயர் இருப்பதாக விவேக் கூறியிருக்கிறார்.

இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி இன்று (ஜூன் 2) திரை உலகப் பிரமுகர்கள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள். இளையராஜா இசை உலகில் பரபரப்பாக பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்கூட அவருக்கு இப்படி வாழ்த்து மழை பொழிந்ததில்லை. நாளுக்கு நாள் ரசிகர்கள் மனதில் அவருக்கான இடம் அதிகரித்துக் கொண்டிருப்பதை இது உணர்த்துகிறது.

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் செய்திகள்தான் இன்று சமூக வலைதளங்கள் முழுக்க விரவிக் கிடக்கின்றன. ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இளையராஜா தொடர்பான ‘ஹேஷ்டேக்’கள் உச்சத்தில் இருக்கின்றன.

இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விவேக் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘சில தருணங்கள்! என்றென்றும் இவர் இசை போல் இளமை! அத்தனை இசைப் பிரியர்களின் ரேஷன் கார்டிலும் இல்லாத, ஆனால் இதயங்களில் இருக்கின்ற பெயர் ‘இளயராஜா’75’ என கூறியிருக்கிறார் விவேக்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தனது மெல்லிசையால் கலைமாமணி , நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூசண், பத்ம விபூசண், தேசிய விருதுகள் உட்பட பல மாநில விருதுகளையும், கோடிக்கணக்கான இதயங்களையும் வென்ற இசைஞானி இளையராஜா அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நீடூழி வாழ எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசைப் புலமையால் உலக நாடுகளையெல்லாம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இசையுலக ஜாம்பவான், இசை மாமேதை இளையராஜா அவர்கள்.’ என கூறியிருக்கிறார்.

டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 75-ஆவது பிறந்தநாள். திரையுலகிலும், இசையுலகிலும் மேலும் பல சாதனைகளைப் படைத்து இறவாப் புகழ் பெற வாழ்த்துகள்!’ என கூறியிருக்கிறார்.

இதேபோல ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close