காவல்துறை முன்னாள் ஐ.ஜி மகன் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு பின்னர், தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை அதிகரித்துள்ளது. தமிழக பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் என இந்த சோதனை நீள்கிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய ஒப்பந்ததாரரான தியாகராஜன் வீடு, அலுவலகங்கள் என அவருக்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இவரது தந்தை தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். தியாகராஜன், வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை மேற்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில், 22 கிலோ தங்க நகைகள், ரூ.40 லட்சம் பணம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக காவல்துறை முன்னாள் ஐ.ஜி அருள் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அடையாறு போட்கிளப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ரூ.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ரூ.10 கோடி ரூபாய் எனக் குறைத்து மதிப்பீடு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

×Close
×Close