Advertisment

மரகதம் அம்மா விழாவுல கூடுனாங்க... இந்திரா விழாவுல அடிச்சிக்குறாங்க! திருநாவுக்கரசர்-இளங்கோவன் லடாய்

இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் திருநாவுக்கரசர்-இளங்கோவன் பூசல் வெளிப்பட்டது. இரு தரப்பும் தனித்தனியே விழா நடத்தினார்கள்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
indira gandhi, indian national congress, s.thirunavukkarasar, evks ilangovan, Maragatham Chandrasekar

இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் திருநாவுக்கரசர்-இளங்கோவன் பூசல் வெளிப்பட்டது. இரு தரப்பும் தனித்தனியே விழா நடத்தினார்கள்.

Advertisment

இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று (நவம்பர் 19) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் எல்லா மாநிலங்களிலும் இதற்காக தனி நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தமிழக காங்கிரஸ் சார்பில் ஒருநாள் முன்னதாக நேற்று கோயம்புத்தூரில் சர்வ கட்சித் தலைவர்களை திரட்டி, திருநாவுக்கரசர் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தினார்கள். அதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

இந்திரா நூற்றாண்டு விழாவான இன்று காலையிலேயே சத்தியமூர்த்தி பவனில் இந்திரா படத்திற்கு மலர் அஞ்சலி, மருத்துவ முகாம் தொடக்கம், தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா எழுதிய நூல் வெளியீடு என திருநாவுக்கரசர் பிஸியாக இருந்தார்.

ஊடகப் பிரிவுத் தலைவரான கோபண்ணா, முன்னாள் மாநிலத் தலைவர் இளங்கோவனுக்கு ஆதரவாக இருந்தவர்தான். ஆனாலும் திருநாவுக்கரசர் தலைவரான பிறகு அவருக்கும் இணக்கமாக செயல்பட்டு வருகிறார். அவர் எழுதிய ‘இந்திராவின் வீர வரலாறு’ என்ற நூலை திருநாவுக்கரசர் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி பெற்றுக்கொண்டார்.

இந்திரா வரலாறு தொடர்பான இந்த புத்தகம் வெளியீட்டு விழா நடந்த அதே நேரத்தில்தான் சென்னை போரூரில் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் விழாவை ஈ.வி.கே.எஸ். அணியினர் தனியாக கொண்டாடினார்கள்.

தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.

இங்கு நடந்த இந்திரா நூற்றாண்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் உள்பட பலர் பேசினார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது நவம்பர் 11-ம் தேதி காங்கிரஸ் மாநில தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் மரகதம் சந்திரசேகரின் நூற்றாண்டு விழா நடந்தது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் அந்த விழாவுக்கு திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி என அத்தனை தலைவர்களும் ஆஜராகியிருந்தார்கள்.

இந்திராவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்தான் மரகதம் சந்திரசேகர். அவரது விழாவுக்கு கூடிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரே வாரத்தில் இந்திரா நூற்றாண்டு விழாவில் அடித்துக் கொண்டிருப்பதுதான் காங்கிரஸ் வட்டாரத்தில் டாக்!

இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் கிருஷ்ணசாமியைத் தவிர்த்து முக்கியத் தலைவர்கள் பலரும் வராதது திருநாவுக்கரசரை டென்ஷனாக்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதேசமயம், ஈ.வி.கே.எஸ். அணியினர் நடத்திய விழாவில் குஷ்பூ, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு அந்த விழாவுக்காக முக்கியத்துவத்தை கூட்டினர். இந்த விவகாரத்தை டெல்லி கவனத்திற்கு எடுத்துச் செல்ல திருநாவுக்கரசர் கூறியிருப்பதாக தெரிகிறது.

இரு தினங்களுக்கு முன்பு ஒரு டிவி பேட்டியில் இளங்கோவன் பேசுகையில், ‘ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பல நேரங்களில் சசிகலா மற்றும் நடராஜனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் பேசி வருகிறார்’ என இளங்கோவன் குறிப்பிட்டார். இதுதான் இப்போதைய லடாய்க்கு காரணம் என தெரிகிறது.

இது குறித்து பேசும் திருநாவுக்கரசர் தரப்பினர், ‘சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடத்தும் ரெய்டை அரசியல் உள்நோக்கம் கொண்டது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடப்பட்டது. அந்த கருத்தையே திருநாவுக்கரசர் வெளியிட்டார்.

ஆனால் அதே டிவி பேட்டியில் பேசிய இளங்கோவன், ‘மோடி செய்த நல்ல காரியம் இந்த ரெய்டு’ என கூறினார். இதிலிருந்தே அகில இந்திய காங்கிரஸ் கருத்தை யார் பேசுகிறார்கள் என்பது புரியும். திருநாவுக்கரசர் மீது சாதிச்சாயம் பூசுவதற்கே இளங்கோவன் இது போன்ற கருத்தை வெளியிடுகிறார். இதை மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்’ என்கிறார்கள் அவர்கள்.

 

 

Indira Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment