Advertisment

“எப்போது ஜேசிபி வீட்டு வாசலில் வந்து நிற்கும் என்ற கலக்கத்துடன் உறங்கச் செல்கிறோம்” - அச்சத்தில் பெத்தேல் நகர் மக்கள்

வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் பொதுமக்கள்.

author-image
Nithya Pandian
New Update
Injambakkam Bethal Nagar eviction

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் குடியிருப்பாளர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற குழந்தை (Express Photo by Nithya Pandian)

Injambakkam Bethal Nagar eviction : மளிகை, உணவுப் பொருட்கள் என மாலையில் வீடு திரும்பும் மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதில் தான் ஒரு கடை வீதியின் உயிரோட்டமே இருக்கிறது. இரவு எட்டு மணியை எட்டிய போதும் கடை வீதியில் கூட்டம் இல்லை. ஒரு சில இடங்களில் மட்டும் பெரிய இரும்பு கதவுகளுக்கு வெளியே அரிசி மூட்டையையும், பலசரக்குகளையும் வைத்து ”பேட்டரி லைட்” துணையுடன் வியாபாரம் செய்து வருகின்றனர் பெத்தேல் நகர் கடை உரிமையாளர்கள்.

Advertisment
Injambakkam Bethal Nagar eviction

ஷட்டருக்கு வெளியே பலசரக்கு விற்கும் நடத்தும் கடையின் உரிமையாளர்

“மூன்றடுக்கு குடியிருப்பின் கீழ் பகுதியில் இயங்கி வரும் கடைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடை இழுத்து மூடி 2 மாதங்கள் ஆகப் போகிறது. மழை பெய்தால் என்ன செய்வோம்? வரும் கோடை காலத்தில் இந்த ”இரண்டு அடி” தற்காலிக கடையில் எப்படி சரக்குகளை வைத்து விற்போம்? 18 வருடங்களாக இங்கே கடை நடத்தி வருகிறேன். வீட்டுக்கு தரப்பட்டிருக்கும் மின் இணைப்பை பயன்படுத்தி கடை நடத்தினோம் என்ற குற்றச்சாட்டு வேறு. கொஞ்சம் நீங்கள் காத்திருந்தால் நான் என்னுடைய வீட்டு மின்சார கட்டண அட்டையையும், கடைக்கான அட்டையையும் எடுத்து வந்து தருவேன்” என்கிறார் பெயர் கூற விரும்பாத பெத்தேல் நகர் குடியிருப்பாளர்.

“மேய்க்கால் புறம்போக்கு என்றார்கள், கழுவெளி என்றார்கள். வயித்துப்பாட்டுக்கு என்ன செய்யலாம் என்று மட்டும் அவர்கள் கூறவே இல்லை” என்று மனம் உடைந்து பேசும் அவர் பெத்தேல் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட 152 கடைகளின் உரிமையாளர்களில் ஒருவர்.

மளிகைக் கடை மட்டுமல்ல, பழக்கடை, சிற்றுண்டிக் கடை என அனைத்திற்கும் இதே நிலை தான். கிழக்கு கடற்கரை சாலை செல்லும் பகுதியில் ஈஞ்சம்பாக்கம் அருகே அமைந்திருக்கும் 51 தெருக்களை கொண்ட குடியிருப்பில் மளிகைக்கடைகள், வணிக தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகள் கழித்து அவசரத்திற்காக பயன்படும் வகையில் செயல்பட்டு வந்த மருத்துவமனையின் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் அதுவும் மூடப்பட்டுவிட்டது. அடிப்படை தேவைகளுக்காக கூட மக்கள் குடியிருப்பில் இருந்து வெகு தூரம் வெளியே வர வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

publive-image

அடைக்கப்பட்ட கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெத்தேல் நகர் குடியிருப்பாளர்கள்

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு விவகாரம் : இதுவரை நடந்தது என்ன?

வடக்கும் தெற்குமாக நீளும் தெருக்களில் ஒரு பல தெருக்களில் சீரான சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்காக இருக்கிறது. தெருவிளக்குகள் அணையாமல் வெளிச்சம் தருகின்றன. ஆனால் ஒவ்வொரு நாளும் விடியும் போது, வீட்டை இடிக்க ஜே.சி.பியில் அதிகாரிகள் வருவார்களா என்ற அச்சத்தோடு படுக்க செல்கின்றனர் 3500 குடும்பங்களில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள்.

”மேய்க்கால் புறம்போக்கு, கழுவெளி நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் வாழும் மக்கள் உடனே தங்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், 2015ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அன்று வணிக கட்டிடங்களின் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டம், இவர்களின் கோரிக்கை மீது கவனத்தை திருப்பியது. உலக மகளிர் தினத்தன்று இப்பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பெண்கள் பெயரில் பட்டாக்கள் வழங்குமாறு கோரிக்கை வைத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் பெத்தேல் நகர் மக்கள்.

publive-image

2002 / 2021 கால கட்டங்களில் பெத்தேல் நகர்

”இங்கு வாழும் மக்கள் அனைவரும் வீட்டு வேலைக்கும், தினக்கூலிக்கும் செல்கின்றோம். எங்களின் சொந்த ஊர்களில் இருந்த நிலங்கள், வயல்களை விற்று சென்னையில் சின்னதாய் ஒரு சொந்த வீடு என்ற கனவோடு தான் வீடு கட்டினோம். சிறிய கூரையில் ஆரம்பித்து தான் இன்று ஒரு தளம் போட்ட வீடு என்ற நிலைக்கு வந்திருக்கின்றோம். இங்கே நாங்கள் வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. எங்கள் உழைப்பையும் வருவாயையும் நாங்கள் இந்த நிலத்தில் தான் முதலீடு செய்தோம். வங்கிக் கணக்கில் நூறு ரூபாய் கூட இல்லை தற்போது வெளியேற்றப்பட்டால், எங்கே செல்வோம்? எங்களின் நிலை என்ன ஆகுமென தெரியவில்லை” என்று கூறுகிறார் திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட செல்வி.

செல்வி மட்டுமல்ல, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான மக்கள் சென்னையை நம்பி பிற மாவட்டங்களில் இருந்து இங்கே குடியேறிவர்கள். சின்னஞ்சிறு குழந்தை துவங்கி பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, இந்த விவகாரத்தில் முதல்வர் உடனே தலையிட்டு நல்ல முடிவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கழுவெளி மற்றும் மேய்க்கால் புறம்போக்கு அமைந்திருக்கும் சர்வே எண் 281, 282 மற்றும் 283-ல் உள்ள 163 ஏக்கரில், இப்பகுதி மக்கள் வாழ 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்றும், மக்கள் வெளியேற்றப்படமாட்டர்கள், அனைவருக்கும் தமிழக வீட்டு வசதி வாரியம் கட்டித் தரும் குடியிருப்புப் பகுதியில் வசிக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் கூறியதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

publive-image

போராட்டத்தில் ஈடுபட்ட பெத்தேல் நகர் மக்கள் (Express Photo by Nithya Pandian)

”இதே பகுதியில் இஸ்கான் கோவில் இருக்கிறது, இரண்டு சர்வதேச பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோவிலுக்கும் பள்ளிகளுக்கும் இல்லாத சட்டங்கள் அப்பாவி மக்களுக்கு மட்டும் என்பது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மக்களுக்காக துணை நிற்போம் என்றது. ஆனால் ஆட்சியை கைப்பற்றியவுடனே ஜே.சி.பியை பெத்தேல் நகர் பக்கம் தான் திருப்பியுள்ளனர். பெரிய பெரிய பணக்கார்கள் மட்டும் நிலம், செல்வம் என்று வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தினரும் தீப்பெட்டி போன்ற ஒரு குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து, சாகும் வரை கட்சிக் கொடியேந்த வேண்டுமா?” என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்தார் போராட்டத்தில் பங்கேற்ற மற்றொரு பெத்தேல் நகர்வாசி.

தொடர் போராட்டம் தான் முடிவு என கூறும் மக்கள்

”சதுப்பு நிலங்கள் இருப்பது உண்மை தான். எங்கள் குடியிருப்பு பகுதியின் எல்லையும் கூட அதுவே. சதுப்பு நிலங்களில் நாங்கள் யாரும் வீடு கட்டவில்லை. எங்களுக்கு முன்பு பலர் இங்கே நிலம் வாங்கி, பிறகு தான் எங்கள் கைக்கு வந்தது. முப்பது வருடங்களுக்கு முன்பு இப்பகுதி சதுப்பு நிலமாக இருந்ததா என எங்களுக்கு தெரியவில்லை. கலைஞரின் ஆட்சி காலத்தில் சர்வே எண் 281-ல் 33 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. சதுப்பு நிலமாக இருந்திருந்தால் பட்டாக்களே கிடைத்திருக்காதே” என்று தீர்க்கமாக கூறுகிறார் பெத்தேல் நகரில் வசித்து வரும் சாந்தமூர்த்தி.

எந்த இயற்கை சூழல் அழியக் கூடாது என்று வீடுகளை காலி செய்யக் கூறுகிறார்களோ அதே இடத்தில் தான் குடியிருப்பு பகுதிகளை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. இது அரசின் வாதத்திற்கே முரணாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

”ஒரு மூனு சென்ட்டில் வீடு வாங்கினால் அதை நான் என்னுடைய இரண்டு மகன்களுக்கு பிரித்து கொடுத்துவிடுவேன். நாளை ஒரு அவசர தேவை என்றால் அரசு கூறும், அடிக்குமாடி குடியிருப்பில் என்னுடைய பகுதியை நான் யாருக்காவது விற்க முடியுமா? பணத்தையும் உழைப்பையும் முதலீடாக இங்கே கொடுத்துள்ளோம். அப்படி இருக்கின்ற போது ஏன் ஒரு கையகல குடியிருப்பு பகுதியில் என்னுடைய வாழ்வை கழிக்க வேண்டும்? வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் உருவாகியிருக்கும் கட்டிடங்கள் எதன் மீது அமைக்கப்பட்டிருக்கிறது? இதற்கு ஏன் யாரும் விடை தேடுவதில்லை? அவர்களை அகற்ற ஏன் அரசு முயலுவதில்லை? என்றும் தங்கள் தரப்பு ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் பொதுமக்கள்.

publive-image

போராட்டத்தில் ஈடுபட்ட பெத்தேல் நகர் மக்கள் (Express Photo by Nithya Pandian)

கோவில்கள், மசூதி மற்றும் தேவாலயங்களும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கே ஜெபத்திற்காக வரும் ஏ.பி.இ. தேவாலய உறுப்பினர்களிடம் இது குறித்து பேசிய போது, “நாங்கள் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் இல்லை. ஆனாலும் இந்த பகுதியில் தான் எங்களுடைய தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இங்கே ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றோம். எங்களின் தேவாலயம் செயல்பாட்டிற்கு வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் என்று இந்த தேவாலயமும் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து நாங்கள் இப்பகுதி மக்களோடு மக்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். மார்ச் 16ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்க உள்ளதாக கூறியுள்ளது. இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் மக்களின் முடிவுகளுக்கு ஏற்ப எங்கள் ஆதரவை வழங்குவோம்” என்று குறிப்பிட்டனர்.

மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக தீர்ப்பு வரும் பட்சத்தில் போராட்டத்தை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர் பெத்தேல் நகர்வாசிகள்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோடை காலம் வரை காலக்கெடு

2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்று 2019ம் ஆண்டு இதே பகுதியில் வசித்து வரும் சேகர் உயர் நீதிமன்றத்தை நாட, உடனடியாக அனைத்து வீடுகளையும் அப்புறபடுத்த உத்தவிட்டது உயர் நீதிமன்றம்.

2010ம் ஆண்டு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்து காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவு பிறப்பித்தார். இதன் அடிப்படையில், நிராகரிக்கப்பட்ட பட்டாக்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் நிலத்தை வகைமாற்றம் செய்ய பரிந்துரை மட்டுமே வழங்க இயலும். இறுதி முடிவை நில நிர்வாக ஆணையர் தான் எடுப்பார். எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

152 வணிக கட்டிடங்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா காலம் என்பதாலும் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆண்டுத் தேர்வை முடிக்க வேண்டும் என்பதாலும் மக்களை அப்புறப்படுத்த காலக்கெடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது.

இந்த நாட்டின் நலனுக்காக எத்தனையோ மக்கள் மாபெரும் காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒரு சிறிய பங்காக இயற்கையை காக்கவே முயற்சி செய்தேன். மேற்கொண்டு இது தொடர்பாக ஏதும் பேச விருப்பம் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார் இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற சேகர்.

இயற்கை ஆர்வலர்களின் கருத்து

”சென்னையின் பெரும்பாலான இடங்களில் அதிக அளவில் சதுப்பு நிலங்கள் இருந்தன. வெள்ளம் மற்றும் மழைகாலங்களில் பெருக்கெடுத்தும் ஓடும் நீர் அருகில் உள்ள சதுப்பு நிலங்களில் பரவும். இது மழைகாலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் இயற்கை அமைப்பு. பல மைல் தூரங்கள் மண், கல், மாசு என்று அடித்துக் கொண்டு வரப்படும் நீரில் உள்ள அனைத்து அசுத்தங்களையும் வடிகட்டி சுத்தமான நீரை வழங்குகிறது சதுப்பு நிலங்கள். இதனை மனிதர்களாலும் நவீன தொழில்நுட்பத்தினாலும் ஒரு நாளும் சாதித்துவிட இயலாது” என்று சதுப்பு நிலங்களின் தேவை குறித்து பேசுகிறார் இயற்கை ஆர்வலரும் எழுத்தாளருமான யுவன்.

”பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெத்தேல் நகர் பகுதிகளிலேயே பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டிடங்கள், தொழிற்பூங்காக்கள், ரியல் எஸ்டேட், பணம் படைத்தவர்களின் குடியிருப்புகள் எல்லாம் அமைந்துள்ளது. ஏற்றத் தாழ்வுகள் பார்க்காமல், அரசு நடக்கும் பட்சத்தில் அதில் ஒரு சமூக நீதி இருக்கிறது என்று நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பெத்தேல் நகர் மக்களை வெளியேற்றி தான் இந்த இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால் அந்த முடிவை ஏற்றுக் கொள்வது கடினமான ஒன்று” என்றும் அவர் தெரிவித்தார்.

அதிகாரமும், வேலை வாய்ப்புகளும் நகர்ப்புறங்களில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி நகர துவங்குகின்றனர். அத்தனை பேருக்குமான வசதியான இருப்பிடங்களை, இயற்கை சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தாத வகையில் உருவாக்குவது என்பது இன்றைய சூழலில் கடினமான ஒன்று. ஆனாலும் வாய்ப்புகள் பரவலாக்கப்படும் போது நகர்புறங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் சிறிய அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில் அரசு துறைகளில் செயல்படும் அதிகாரிகளின் கருத்துகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுவதற்கு மாற்றாக துறைசார் வல்லுநர்கள் முன்வைக்கும் சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு இயற்கைக்கும், மக்கள் நலனுக்கும் பாதிப்பு ஏற்படாத திட்டங்களை அரசு முன்னெடுக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் இப்படி பொதுமக்கள் சாலையில் நின்று போராடுவதும், எப்போது வீடு இடிக்கப்படும் என்ற கவலையில் உறங்கச் செல்வதும் குறையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment