”500 இந்திய புலனாய்வு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது வேதனையளிக்கிறது” - கனிமொழி

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் டெல்லியில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

தமிழகத்தில் மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் மாற்றப்பட்டது மிகுந்த வேதனை மற்றும் அதிர்ச்சியளிப்பதாக  திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.குறிப்பாக தில்லி, அகமதாபாத், பெங்களுரு, போபால், புபனேஷ்வர், சண்டிகர், கௌஹாத்தி மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

யாரும் எதிர்ப்பார்க்காத இந்த  மாபெரும் பணியிடை மாற்றம்  பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 500 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய என்ன காரணம் என்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இதுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், கருத்து தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் கூறியதாவது, “ ஞாயிறன்று டெலிகிராப் நாளிதழில் வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 500க்கும் மேற்பட்ட மத்திய உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் ப்யூரொவின் கள அதிகாரிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மாற்றியடிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய உளவுப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதே போல கர்நாடகாவில் இருந்த அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உளவுத்துறையின் பணியானது நாட்டின் பாதுகாப்புக்கு மிக மிக அவசியமானது.

உளவுத்துறையின் பணியால்தான் பல்வேறு ஆபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன.ஆனால், கன்னடம் தெரியாத தமிழ் அதிகாரிகளை கர்நாடகாவுக்கு மாற்றி நியமித்தால் கன்னடம் தெரியாமல் இவர்கள் எப்படி தகவல் சேகரிப்பார்கள் என்பது மிகவும் வியப்பாக உள்ளது.

மொழி தெரியாமல் உளவுத்துறையில் ஒரு அதிகாரி எப்படி பணியாற்ற முடியும். டெலிகிராப் நாளேட்டின் செய்தி, கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடுகிறதுதமிழகம் கர்நாடகா தவிர, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மற்றும் டெல்லியில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மாறுதலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச இடைத்தேர்தல்களின் பிஜேபி சந்தித்த பின்னடைவுகள் இந்த மாறுதல்களின் பின்னணியில் இருக்கலாம் என்றும் டெலிகிராப் நாளேடு கூறுகிறது.அரசியல் காரணங்களுக்காக, நாட்டின் முதுகெலும்பாக உள்ள மத்திய உளவுப் பிரிவையே சீர்குலைக்கும் அளவுக்கு மத்திய அரசு இறங்கியுள்ளது மிகவும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

அரசியல் காரணங்களை கவனத்தில் கொள்ளாமல், நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, உடனடியாக இந்த மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close