Advertisment

பேரிடர் நகரம் சென்னை: எச்சரிக்கும் IPCC அறிக்கை

வெட்பல்ப் வெப்பநிலையை ஒரு நகரம் சந்திக்கும் பட்சத்தில், உருவாகும் வெப்ப அலையில் சிக்கி மனிதர்கள் அதிக அளவில் மாண்டு போகும் நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

author-image
Nithya Pandian
New Update
Chennai City declared as a disaster area

Chennai City declared as a disaster area: சமீபத்தில் வெளியான ஐ.பி.சி.சி. அறிக்கையில் 2014 முதல் 2021 ஆண்டு வரை ஏற்பட்ட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய மழைப்பொழிவு, வெள்ள நிகழ்வுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழை, அதன் அளவுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக பல்வேறு இடங்களில் இந்த குறிப்பிட்ட காலத்தில் மிகப்பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் வெள்ள நிகழ்வுகளை உருவாக்கியுள்ளது.

Advertisment

உள்ளாட்சிக்கு இருக்கும் “பவரே” தனிதான்; கார்பன் உமிழ்வை தடுக்க இந்த கேரள கிராமம் என்ன செய்திருக்கிறது பாருங்கள்

மழை மட்டுமின்றி மண்ணின் ஈரப்பதம், பனிப்பாறைகள் உருகும் அபாயம், நில பயன்பாடுகளில் மாற்றம், நதி நீர் மேலாண்மை மற்றும் ஆற்றுப்படுகையில் நீரின் பயன்பாடு போன்றவையும் இத்தகைய தொடர் வெள்ளங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று ஐ.பி.சி.சி. அறிவித்துள்ளது. ஆய்வு ஒன்றில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 25 - 100 ஆண்டுகள் என்ற நீண்டு கால இடைவெளிகளை ஆய்வு செய்த போது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் எந்த விதமான வெள்ள நிகழ்வுகளும் அரங்கேறவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட, தென் அமெரிக்காவில் மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக (Anthropogenic Climate Change) வெள்ள நிகழ்வுகள் மற்றும் மழை பொழிவின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று குறிப்பிடுகிறது இந்த அறிக்கை. 2010 முதல் 2013 வரையிலான காலகட்டங்களில் மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் 64% வெள்ள நிகழ்வுகளின் போக்கை மாற்றி குறிப்பிட தக்க வகையில் நஷ்டத்தையும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Chennai City declared as a disaster area

2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த 18 முக்கிய வெள்ள நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ள ஐ.பி.சி.சி. சென்னையில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிகழ்வையும் குறிப்பிட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிகழ்வால் 5.5 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ”பேரிடர் நகரம் சென்னை” என்று இந்த பட்டியலில் தமிழக தலைநகர் குறிப்பிடப்பட்டு, 2015ம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தினால் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சேதாரங்கள் ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்ற எச்சரிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்த போக்கில் மாற்றத்தைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினாலும் கூட, கூறப்பட்ட காலத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் இயல்பு நிலைக்கு உலகம் திரும்புவது என்பது சவாலான ஒன்றாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆபத்தில் சென்னை

2070ம் ஆண்டில் இந்தியா நெட் ஜீரோ எமிஷன் என்ற இலக்கை எட்டும் என்றும் 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கொண்டு உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் பட்சத்தில், வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டாலும் கடல் நீர் மட்டம் 44 முதல் 72 செ.மீ வரை உயரக்கூடும். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் பனிப்பாறைகள் உருகி, உலக அளவில் கடல் நீர் மட்டம் இந்த நூற்றண்டின் இறுதிக்குள் 2 மீட்டர் உயரம் வரை உயரக்கூடும். 2150ம் ஆண்டு வாக்கில் கடல்நீர் மட்டம் 5 மீட்டர் வரை உயரக்கூடும். எனவே தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்விடங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

வெட் - பல்ப் வெப்பநிலை (Wet Bulb temperature)

வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் இரண்டும் ஒன்றிணைந்து வெட் பல்ப் என்ற காலநிலை தெற்காசியாவில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் உருவாகக் கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. 32 டிகிரி முதல் 34 டிகிரி வரையிலான வெப்பநிலையை நாம் இவ்வாறு அழைக்கின்றோம். இந்தியாவில் புவனேஷ்வர், சென்னை, மும்பை, இந்தூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் இந்த வெப்பநிலையை எட்டக் கூடும் என்று கூறுகிறது ஐ.பி.சி.சி. அறிக்கை.

இந்த வெப்பநிலையை ஒரு நகரம் சந்திக்கும் பட்சத்தில், அப்போது உருவாகும் வெப்ப அலையில் சிக்கி மனிதர்கள் அதிக அளவில் மாண்டு போகும் நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக பணியாற்றும் எஸ். ஜனகராஜன் இது குறித்து பேசிய போது, “ஐ.பி.சி.சி.யின் சமீபத்திய அறிக்கைகள் ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தை வழங்கவில்லை. இதற்கு முன்பு வந்த அறிக்கைகளின் முடிவுக்கு இது முரண்படாக இருக்க காரணம், தொடர்ந்து காலநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தான் காரணம்” என்று குறிப்பிட்டார்.

தமிழகம், இந்திய அளவில் நகர்ப்புறங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கையை அதிகமாக கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 50% மேலான தமிழக மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் போது தமிழகம் மிக மோசமான பின்விளைவுகளை சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த அடர்த்தியான காடுகள் காணாமல் போன நிலையில், அதனையே அதிகம் நம்பியிருக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கும் என்று தெரிவித்தார். கடல் நீர் மட்டம் உயரும் போது சென்னை, நாகை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அடுத்த 20 அல்லது 30 வருடங்களில் மிகப்பெரிய இழப்புகளை நாம் சந்திப்போம் என்றும் எச்சரிக்கை செய்கிறார் ஜனகராஜன்

முந்தையை ஐ.பி.சி.சி. அறிக்கைகளில் “கட் ஆஃப்” ஆண்டு 2050 ஆக இருந்தது. தற்போதைய அறிக்கையில் அது 2040ஆக உள்ளது. 2040 என்பது தற்போது மிக விரைவாக மாறிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தை குறைக்க மிகவும் குறைவான நேரமே நம்மிடம் உள்ளது என்பதை குறிப்பதாகும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப, உடனடியாக, விரிவான தீர்வுகளை நாம் கையாள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி. சுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment