Advertisment

உலகிற்கு வழிகாட்டி; தமிழ்நாட்டில் இருந்து தான் இரும்பு காலம் தொடக்கம்: முக்கிய அறிவிப்பை வெளிட்ட ஸ்டாலின்

இரும்பின் தொன்மை நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி & கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
stal res

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.23) கலந்துகொண்டார். தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை ஸ்டாலின் வெளியிட்டார். 

Advertisment

பின்னர் நிகழ்ச்சியில்  பேசிய ஸ்டாலின், "தமிழர்களுடைய தொன்மையை உலகுக்கு கூறும் மாபெரும் ஒரு ஆய்வு பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கப் போகிறேன். இங்கு கூடியிருப்பவர்களும், நேரலையில் இதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் கவனமாக கேட்கவும். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ்நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம்.  

தமிழக அரசால் தொல்லியல் துறையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உலகத்தின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. புனேவில் உள்ள பீர்பால் சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம், ஆகிய தேசிய அளவிலான புகழ்பெற்ற ஆய்வகங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருக்கும் பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

Advertisment
Advertisement

தேசிய நிறுவனங்களில் ஓஎஸ்எல் பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியாக மூன்று நிறுவனங்களிடமிருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது.

இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. 

தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கி.மு. 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள்  நிறுவியுள்ளன.  பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல்பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.

தமிழ் - தமிழ் நிலம் - தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல, அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள். உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை  இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது"  என்றார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment