டெண்டர் வழங்க ரூ.12.65 கோடி லஞ்சம் கேட்டாரா அமைச்சர் கே.பி.அன்பழகன்? நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு

டெண்டர் வழங்க ரூ12.65 லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான டெண்டர் வழங்க 12.65 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.வேங்கன் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

“தமிழக பொதுப்பணித்துறையில் முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். பல ஒப்பந்த பணிகளை செய்துள்ளேன். இந்நிலையில், தேனி மாவட்டம் தேக்கம்பட்டி, மதுரை மாவட்டம் செக்கனூராணி, உசிலம்பட்டி, வேலூர் மாவட்டம் அக்ரஹாரம் கிராமம், விழுப்புரம் மாவட்டம் காட்டுவனஜார், கிருஷ்ணகிரி மாவட்டம் அப்பினச்சென்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, அரியலூர் மாவட்டம் கீழப்பழூர், திருச்சி மாவட்டம் செத்தூரப்பட்டி, ஈரோடு மாவட்டம் பெருந்துரை ஆகிய 10 இடங்களில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்கான டெண்டரை தமிழக பொதுப்பணித் துறை கடந்த மே 8-ம் தேதி வெளியிட்டது.

இதன்படி, ஜூன் 9-ஆம் தேதி இறுதிநாளான அன்று ஒப்பந்த பணிகளுக்கான டெண்டரை தாக்கல் செய்தேன். அன்றைய தினம், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களின் தகுதி தொடர்பான ஆவணங்கள் திறக்கப்பட்டது. அதில், என்னுடைய நிறுவனம் தகுதி பெற்றிருந்தது.

இந்நிலையில், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் என்னை ஜூலை 13-ஆம் தேதி அழைத்தார். அவரை சந்தித்தபோது அவர் என்னிடம் உயர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்தால் தான் இந்த டெண்டர் கிடைக்கும் என கூறினார். இதையடுத்து, அன்றைய தினமே அமைச்சர் கே.பி.அன்பழகனை சந்தித்தேன்.

அப்போது, இந்த ஒப்பந்த பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்போவதாகவும், டெண்டரிலிருந்து விலகிவிடுமாறும் கூறினார். அப்போது, நான் மற்றவர்களை விட குறைவான தொகையைத்தானே குறிப்பிட்டேன் என அமைச்சரிடம் கூறினேன்.

அதற்கு, நந்தினி கட்டுமான நிறுவனம் 16 சதவீதம் கமிஷன் தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், எனக்கு இந்த ஒப்பந்ததைத் தர வேண்டுமானால் 20 சதவீத கமிஷன் தரவேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். ஆனால், எனக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை.

மேலும், டெண்டரை விதிகளுக்கு உட்பட்டு திறக்கக்கோரி ஜூலை 21-ஆம் தேதி தலைமைப் பொறியாளரிடம் மனு அளித்தேன். அதுமட்டுமல்லாமல், தமிழக ஆளுநரிடம் ஜூலை 22ம் தேதி டெண்டர் முறைகேடு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்த டெண்டரின் மதிப்பு 79 கோடி ரூபாய். இதில், 16 சதவீத கமிஷன் 12.65 கோடி ரூபாய். இதுபோன்ற முறைகேடுகளால் பணிகளில் குளறுபடிகள் ஏற்படும். எனவே, அமைச்சரை கலந்து பேசாமை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் டெண்டரை திறக்க நேரம் குறித்து எனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும். எனக்குத் தெரிவிக்காமல் டெண்டரைத் திறக்க தடை விதிக்க வேண்டும்.”, என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி, ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

×Close
×Close