கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நேற்று கன்னியாகுமரியில் கோலாகலமாக தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
முதல் நாளான நேற்று திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தை முதல்-அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிலையில், 2-வது நாளான இன்று காலையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சி கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விழா பந்தலில் நடைபெற்றது.
இந்த விழாவில் " திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காணும் நிகழ்ச்சியான இது என் வாழ்நாளில் சிறந்த நாள். வள்ளுவர் சிலையை திறந்தபோது கலைஞர் கருணாநிதிக்கு எப்படி இருந்திருக்குமோ அதே உணர்வுதான் எனக்கு உள்ளது. திருக்குறளாகவே வாழ்ந்தவர் கருணாநிதி. வள்ளுவத்தை போற்றும் தொண்டு கருணாநிதிக்கு இருந்தது." என்று பேசினார்.
அதே விழாவில், "தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார் கருணாந்தி. அதைபோல தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் உழைத்துக் கொண்டே இருப்பதுதான் என் வாழ்நாள் கடமை. வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடிக் கொண்டே இருப்போம். தமிழர்களுக்கான பண்பாட்டு அடையாளம் திருவள்ளுவர்." என்று அவர் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா மலரை முதலமைச்சர் வெளியிட்டார். சிறப்பு மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் உருவான வள்ளுவ மாலை பாடலை வெளியிட்டார்.
ஒரு சிலை அமைத்ததற்கு வெள்ளி விழாவா என்ற கேள்விக்கு பதிலாக, "சுனாமியை எதிர்கொண்டு தாங்கி நிற்கும் இந்த திருவள்ளுவர் சிலை நமது பண்பாட்டு குறியீடு. நம் மதம் குறள் மதம், நம் நெறி குறள் நெறி என தந்தை பெரியார் கூறினார். காவி சாயம் பூச நினைக்கு தீய எண்ணங்களை வள்ளுவம் விரட்டியடிக்கும்." என்று கூறினார்.
படகுத்துறையில் திருவள்ளுவர் மணல் சிற்பத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி வண்ண விளக்குகளில் திருவள்ளுவர் சிலை ஒளிர்வதையும், ஸ்டாலின் ரசித்து பார்வையிட்டார்.
திருவள்ளூவர் சிலைக்கு செல்ல 3 புதிய சுற்றுலா படகுகள் வாங்கப்படும். படகுகளுக்கு காமராஜர், நேசமணி மற்றும் ஜி.யு.போப் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு, கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மாவட்டம் தோறும் திருக்குறள் பயிலரங்கம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும். தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுதப்படுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று சில திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.