கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 76 இடங்களில் இரண்டாவது நாளாக ஐடி ரெய்டு!

கிறிஸ்டி நிறுவனத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தமிழகம், கர்நாடகத்தில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில், இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி சத்துமாவு நிறுவனம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தேவையான பருப்பு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தில் நேற்று அதிகாலை முதல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ராசிபுரம் அடுத்த அத்தனூர், புதுசத்திரம் உள்ளிட்ட இடங்களில் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

வாட்டூரில் உள்ள கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, உறவினர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 15 குழுக்களாக பிரிந்து 45-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, கிறிஸ்டி நிறுவனத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை காரணமாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, நிறுவனத்தின் உரிமையாளரான குமாரசாமியின் வழக்கறிஞர் மற்றும் ஆடிட்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

×Close
×Close