Advertisment

அப்போ விஜயபாஸ்கர் வீட்டில்... இப்போ கோடநாட்டில்! தேர்தல் பண வினியோக ஆவணங்களை அள்ளிய ஐ.டி.!

ஆர்.கே.நகரைப் போலவே சட்டமன்றத் தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக கிடைத்த தகவல் குறித்து ஐ.டி. அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vk sasikala, IT raids, aiadmk, kodanad estate, ttv dhinakaran, vivek jeyaraman

ஆர்.கே.நகரைப் போலவே சட்டமன்றத் தேர்தலுக்கும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக கிடைத்த தகவல் குறித்து ஐ.டி. அதிகாரிகள் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

Advertisment

வி.கே.சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ 1000 கோடிக்கும் அதிகமான சொத்து ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஆவணங்களை ஆய்வு செய்ததில் சசிகலா குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.1400 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரியவந்தது. குறிப்பாக ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்சை சசிகலா குடும்பத்தினர் வாங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தெரியவந்திருக்கிறது. அந்த ரூ.1000 கோடி எங்கிருந்து, எப்படி வந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோடநாட்டில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமாக இரண்டு பெரிய தேயிலை எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுத்த எஸ்டேட்டுக்குள் அதிகாரிகளால் விரிவான விசாரணை நடத்த இயலவில்லை. மற்றொரு எஸ்டேட்டான கர்சன் எஸ்டேட்டில் மட்டும் சோதனை நடந்தது.

இங்கு மட்டும் 6-வது நாளாக நீடித்த சோதனை 14-ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. கர்சன் எஸ்டேட்டில் இருந்து அதிகாரிகள் எதிர்பார்த்த அளவை விட மிக அதிக அளவில் ஆவணங்கள் கிடைத்தன. இதையடுத்து கொடநாடு எஸ்டேட் மானேஜர் நடராஜனை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக மிகத் தீவிரமாக விசாரித்தனர். அவரது சில உறவினர்களும் அழைத்து விசாரிக்கப்பட்டனர்.

இந்த விசாரணை குறித்து ஐ.டி. வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்த போது 234 தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்பட்டது. அந்த பணம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வரை அனைத்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இந்த பணப் பட்டுவாடா கோடநாடு எஸ்டேட்டில் இருந்து செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிந்தது. இதனால்தான் கொடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டில் கடந்த 6 நாட்களாக சோதனை நடந்தது. அந்த ரகசிய ஆவணங்களில் தேர்தல் சமயத்தில் நடந்த பணப்பட்டுவாடா பற்றிய தகவல்களும் இருக்கிறது.

அந்த பணப்பட்டு வாடாவை கோடநாடு எஸ்டேட் மானேஜர்தான் பொறுப்பு ஏற்று செய்தார் என்று ஒரு தகவல் கிடைத்திருந்தது. அந்த தகவலை உறுதிப்படுத்தவே கடந்த 2 நாட்களாக நடராஜனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினோம். அவரது பதில்கள் அனைத்தும் எழுத்துப் பூர்வமாகவும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சசிகலா குடும்பத்தினருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்’ என்கிறார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு அதிமுக அம்மா அணி சார்பில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. அதே ரீதியில் சட்டமன்றத் தேர்தல் பண வினியோக ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையே கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனி குமாரையும் அதிகாரிகள் விசாரித்தனர். அங்கிருந்து ஒரு சூட்கேஸ் மற்றும் 4 பைகளில் ஆவணங்களை எடுத்து வந்தனர். இந்த சோதனையில் சென்னை, மன்னார்குடி, ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் குறித்த ஆவணங்ளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. கிரீன் டீ எஸ்டேட் மேலாளர் பழனிகுமார் உள்ளிட்ட 20 பேர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஒரு அறையில் வைத்து நடராஜனிடம் தொடர் விசாரணை நடத்தினர். மீண்டும் நாளை (16-ந் தேதி) ஆஜராகுமாறு நடராஜனுக்கு சம்மன் அனுப்பினர்.

நடராஜன் பெயரில் 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட் வாங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. கோடநாடு எஸ்டேட்டுகளில் தான் முக்கிய சொத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவேதான் இங்கு நடைபெறும் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொடர் விசாரணையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Ttv Dhinakaran Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment