நமக்கு எதிராகச் செயல்படும் 'அந்த' உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் - ஜெ.அன்பழகன்

மெரினாவில் இடமில்லை என்று சொன்னவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தீர்ப்பால் உணர்த்தும் வரை ஓயக்கூடாது.

ஜே அன்பழகன் : சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்குப் பிறகு பேசிய ஜே.அன்பழகன், “கலைஞர் இல்லாமல் இனி எப்படி வாழப்போகிறோம் என்று தெரியவில்லை. நமக்கு இணை எதிரிகள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், அதை நாம் எப்படி முறியடிக்கப்போகிறோம்? அறிஞர் அண்ணா கூறியதுபோல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருக்க வேண்டும். அதிலும் கட்டுப்பாடு தற்போது மிகவும் அவசியம். நமது செயல் தலைவர் நாம் எப்படி கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்று நம்மை வழிநடத்திவருகிறார்.

60 ஆண்டு காலம் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக இருந்தவர். 80 ஆண்டுக்காலம் தன்னைப் பொதுவாழ்வில் அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய அரசியலின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர், நம்மை தவிக்கவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக தலைவர் கருணாநிதியின் குரல் ஒலிக்கவில்லை. ஆனால், கலைஞரின் குரலாக நமது செயல் தலைவர் ஸ்டாலினின் குரல் ஒலித்தது. அதுதான், நாம் அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது.

மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முடியாது என்று ஆளும் அரசு சொன்னபோது, லட்சக்கணக்கான தொண்டர்கள் உணர்ச்சிப்பெருக்கில் எதுவும் பிரச்னை செய்யாதபடி செயல் தலைவர் வழிநடத்தினார். அவரின் அணுகுமுறையும் கட்டுப்பாடும் அனைவரையும் ஈர்த்தது. நமது செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைவராக வரப்போகிறவர். தி.மு.க தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் மூலம் பார்க்கப்போகிறோம். நமக்கு எதிராகச் செயல்படும் அந்த உறவை செயல் தலைவர் ஸ்டாலின் துண்டிக்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பவர்களைக் கண்டிக்க வேண்டும்.

நாம் எல்லோரும் இப்போதுதான் ஒற்றுமையாகவும், இன்னும் வேகமாகவும் செயல்பட வேண்டும். மெரினாவில் இடமில்லை என்று சொன்னவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தீர்ப்பால் உணர்த்தும் வரை ஓயக்கூடாது.

கலைஞரை, பெரியாராகவும், அண்ணாவாகவும் பார்த்தோம். இப்போது ஸ்டாலினை பெரியார், அண்ணா, கலைஞர் என மூவருமாக பார்க்கிறோம்” என்று ஜே.அன்பழகன் அன்பழகன் பேசினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close