Advertisment

வேதா இல்லம் தீர்ப்பு நியாயமானது; மேல்முறையீடு செய்தாலும் சட்டப்படி சந்திப்போம் – ஜெ.தீபா

J Deepa welcomes Veda house verdict, believes stalin won’t go appeal: ஜெயலலிதாவின் வேத இல்ல வழக்கு தீர்ப்பு நியாயமானது; முதல்வர் ஸ்டாலின் மேல்முறையீடு செய்ய மாட்டார் – ஜெ.தீபா

author-image
WebDesk
New Update
வேதா இல்லம் தீர்ப்பு நியாயமானது; மேல்முறையீடு செய்தாலும் சட்டப்படி சந்திப்போம் – ஜெ.தீபா

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை வரவேற்றுள்ள ஜெ.தீபா, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் சட்டரீதியாக சந்திப்போம் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில், வாழ்ந்த வேதா நிலையத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு சட்டம் இயற்றி அரசுடைமையாக்கியது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய உத்தரவு செல்லாது என்றும், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட மனுதாரர்களான தீபா மற்றும் தீபக்கிடம் மூன்று வாரங்களுக்குள் வேதா இல்லத்தை ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, எனது அத்தை ஜெயலலிதாவின் ஆன்மா என்னை கைவிடவில்லை என நினைக்கிறேன். எங்கள் குடும்ப சொத்தை நான் அனுபவிக்க வேண்டும் என்பதே மறைந்த எனது பாட்டி, அப்பா, அத்தை உள்ளிட்டோரின் விருப்பமாக இருந்திருக்கும். அதனால் அவர்களது ஆன்மா தான் இப்படி ஒரு தீர்ப்பு வந்ததன் பின்னணியில் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அதிமுக ஆட்சியில் அத்தையோட வீட்டை கைப்பற்றியது முதல் நிம்மதி இல்லாமலே இருந்து வந்தேன்.

நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு செல்லமாட்டார் என நம்புகிறேன். அத்தையோட வீட்டுக்கு செல்வது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சகோதரர் தீபக் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துபேசிய பிறகே அத்தையோட வீட்டுக்கு செல்வது பற்றி பேச முடியும்.

இது சாதகமான தீர்ப்பே அல்ல. இது நியாயமான தீர்ப்பு. நியாயப்படி, சட்டப்படி, தர்மப்படி இந்த தீர்ப்பை தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்தோம். சொல்லப்போனால் சட்டம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும். இந்த வழக்கு முறைப்படி தான் நடந்தது. அதில் எந்த குறையும் சொல்லமுடியாது. சிரமங்களை அதிகம் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்ப்புகள் அதிகம் இருந்தது. அதிமுக கட்சி சார்பில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது என்று கூறினார்.

வேதா இல்லம் எப்போது செல்வீர்கள் என்று கேட்டபோது, தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். வேதா இல்லத்தின் சாவியை பெறுவதோடு எல்லாம் முடிந்துவிடாது. நாங்கள் சட்ட விதிகளை முழுமையாக படித்து, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க வேண்டும். அதன்பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று ஜெ.தீபா கூறினார்.

வேதா இல்லம் அதிமுகவின் கோவில் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளது சரியான கருத்து தான். அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கில்லை. நானே இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அதற்காக சட்டப்படியான வாரிசுதாரர்களிடம் அந்த பொறுப்பு செல்வதை தடுக்க கூடாது. வேதா இல்லத்தை கோவிலாக கருதுவது அவர்களது உரிமை, அதனை உடைமை என்று எடுத்துக்கொள்வது தவறு.

இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் சட்டரீதியாக அதை எதிர்கொள்வோம். வேதா இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றும் எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை. அப்படி ஒரு திட்டம் இருந்தால் நாங்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே. இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Admk Jayalalithaa Veda Nilayam Deepa Jayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment