Advertisment

ஜே.கே.புதியவன் கொலை பின்னணி! டிரைவரை தூண்டி விட்டது யார்?

ஜே.கே.புதியவன் கொலை பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது முன்னாள் டிரைவரை தூண்டி விட்டது யார்? என விசாரணை நடக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
J.K.Puthiavan, Murder, Inquiry on Driver

J.K.Puthiavan, Murder, Inquiry on Driver

ஜே.கே.புதியவன் கொலை பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது முன்னாள் டிரைவரை தூண்டி விட்டது யார்? என விசாரணை நடக்கிறது.

Advertisment

J.K.Puthiavan, Murder, Inquiry on Driver ஜே.கே.புதியவன், ரயில்வே தொழிற்சங்கத்தினருடன்!

ஜே.கே.புதியவன், தமிழ்நாடு அளவில் பிரபலமான ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்! சென்னை, வில்லிவாக்கம் ஐ.சி.எஃப். பகுதியிலுள்ள அவரது வீட்டில் இன்று (பிப்ரவரி 9) காலை அவரை சிலர் வெட்டிக் கொலை செய்திருக்கிறார்கள். இந்தக் கொலை, ரயில்வே தொழிற்சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜே.கே.புதியவன், ரயில்வேயில் அகில இந்திய இதர பிற்பட்டோர் தொழிற்சங்கத்தின் (ஏ.ஐ.ஓ.பி.சி.) தெற்கு மண்டல பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தார். இயல்பாகவே ரயில்வே தொழிற்சங்கள் இடையே கடும் போட்டி மனப்பான்மை உண்டு. ஒவ்வொரு சங்கமும் ஊழியர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெறவும் முட்டி மோதிக் கொள்வது சகஜம்!

J.K.Puthiavan, Murder, Inquiry on Driver ஜே.கே.புதியவன், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியுடன்! அருகில் வழக்கறிஞர் பாலு.

ஜே.கே.புதியவன், தொழிற்சங்க நடவடிக்கைகளில் மிக துடிப்பாக இயங்கி வந்தவர்! குறிப்பாக ரயில்வேயில் பணியாற்றும் இதர பிறபட்டோர் பிரிவினர் (ஓபிசி) இட ஒதுக்கீடு, மண்ணின் மைந்தர்களுக்கான வேலை வாய்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். சென்னையில் மட்டுமல்லாமல், வேலூர், திருச்சி என மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் சென்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார்.

ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன்பு அதிக போராட்டங்களை நடத்தக்கூடிய தொழிற்சங்கத் தலைவர்களில் இவர் முக்கியமானவர்! அரசியல் கட்சிகள் ஸ்டைலில் நடை பயணம் மூலமாக தொழிலாளர்களை தேடிச் சென்று இவர் நடத்திய குறை கேட்பு நிகழ்ச்சிகளை தெற்கு ரயில்வே தொழிற்சங்க வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக கூறுகிறார்கள்.

தொழிற்சங்கத்தில் இவரது வேகமான செயல்பாடு எந்த அளவுக்கு ஆதரவை பெற்றுக் கொடுத்ததோ, அதே அளவு சில எதிர்ப்புகளையும் சம்பாதித்துக் கொடுத்ததாகவே கூறப்படுகிறது. எனவே அவரது கொலை நிகழ்ந்ததுமே போலீஸாரின் முதல் பார்வை, தொழிற்சங்க போட்டியில் இந்தக் கொலை நடந்ததா? என்பதாகத்தான் இருந்தது.

புதியவன் கொலை செய்யப்பட்ட போது, அவரது மனைவி அதே வீட்டில் இருந்திருக்கிறார். அவர் சுதாரிப்பதற்குள் அங்கு வந்தவர்கள் சரமாரியாக வெட்டி வீழ்த்திவிட்டு சென்றிருக்கிறார்கள். வெட்டியவர் குறித்து தனது மரணத்திற்கு முன்பு பேசிய ஜே.கே.புதியவன், ‘பாஸ்கரன்’ என்ற பெயரை உச்சரித்ததாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.

பாஸ்கரன் என்பவர், ஜே.கே.புதியவனின் முன்னாள் டிரைவர் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அவருக்கும் ஜே.கே.புதியவனுக்கும் என்ன விரோதம்? என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். பாஸ்கரனை பிடிக்கவும் போலீஸ் படை முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

வன்னியர் சமூகத்தை சேர்ந்தவரான ஜே.கே.புதியவன், வட மாவட்டங்களில் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருக்கமான நட்பை பேணி வந்திருக்கிறார். முன்னாள் எம்.பி.யான கார்வேந்தன் இவரது தொழிற்சங்க நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்று வந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியும் இவரது தொழிற்சங்கம் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு கொடுத்திருக்கிறார்.

கடந்த ஆகஸ்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருந்தபோது அன்புமணியின் மனைவி சவும்யா நடத்தி வரும் பசுமை தாயகம் அமைப்பும், இவரது தொழிற்சங்கமும் இணைந்து நில வேம்பு குடிநீர் வினியோகம் செய்தன. அந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்தார்.

சென்னையில் நண்பர்கள் நல கழகம் என்ற அமைப்பிலும் பொறுப்பில் இருந்தார் ஜே.கே.புதியவன். அந்த அமைப்பு சார்பில் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வந்தனர். உயர் போலீஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் இந்த ரீதியில் அவருடன் தொடர்பில் இருந்தனர். எனவே ஜே.கே.புதியவன் கொலை ரயில்வே தொழிற்சங்க வட்டாரத்தில் மட்டுமல்லாமல், அரசியல் தளத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

‘குற்றவாளிகளை நெருங்கியிருக்கிறோம். அதி விரைவில் கைது இருக்கும்’ என்கிறார்கள் போலீஸார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment