ஜே.கே.புதியவன் கொலை நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்

ஜே.கே.புதியவன் கொலை நடந்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் நட்பாக பேசுவது போலவே சென்று தீர்த்துக் கட்டியுள்ளது கும்பல்!

ஜே.கே.புதியவன் கொலை நடந்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரிடம் நட்பாக பேசுவது போலவே சென்று தீர்த்துக் கட்டியுள்ளது கும்பல்!

ஜே.கே.புதியவன், ரயில்வேயில் இதர பிற்பட்டோருக்கான தொழிற்சங்கத்தின் தெற்கு மண்டல பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவரை இன்று (பிப்ரவரி 9) காலை சென்னை வில்லிவாக்கம், ஐ.சி.எஃப் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சிலர் வெட்டிக் கொலை செய்தனர். புதியவனிடம் டிரைவராக வேலை பார்த்த பாஸ்கரன் என்பவரே இந்த சதியை அரங்கேற்றியவர் என தகவல்கள் வருகின்றன.

புதியவன் கொலை செய்யப்பட்டபோது, அவரது மனைவி அங்கு இருந்தாரா? என முதலில் முரண்பட்ட தகவல்கள் வந்தன. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீஸார் கூறிய முதல் கட்டத் தகவல்கள் வருமாறு :

ஜே.கே.புதியவன், தெற்கு ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ரஞ்சிதா. இருவரும் ஐ.சி.எஃப்.பில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு அக்‌ஷயா (16), அனுசுயா (14) என இரு மகள்கள்!

இன்று காலையில் ரஞ்சிதா வேலைக்கு சென்று விட்டார். மகள்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். காலை 8.30 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் புதியவனின் வீட்டுக்கு சென்றனர். அவர்களில் இருவர் மட்டும் 2-வது மாடியில் உள்ள புதியவனின் வீட்டுக்கு சென்றனர். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து புதியவனை சரமாரியாக வெட்டினர்.
அவரது தலை, முகம், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த புதியவன் கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து புதியவனை வெட்டியவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர்.

புதியவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐ.சி.எஃப். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் புதியவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே புதியவனின் மனைவி ரஞ்சிதா அங்கு வந்து சேர்ந்தார். புதியவன் மரணத்திற்கு முன்பு, தன்னை வெட்டியவர், ‘பாஸ்கரன்’ என தனது மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே புதியவனின் முன்னாள் கார் டிரைவரான பாஸ்கரனை போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்தக் கொலை குறித்து இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் சிராஜூதீன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். புதியவனின் வீட்டு அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கொலையாளியின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தினர்.

புதியவனிடம் கார் டிரைவராக இருந்த பாஸ்கரன் என்பவரே இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக அதன் மூலமாகவும் போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள். பாஸ்கரனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் இன்று காலையில் யார் யாரிடம் பேசினார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாஸ்கரனுக்கு கொலையுண்ட புதியவன் பணம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. புதியவன் தான் கொடுத்த பணத்தை பாஸ்கரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். புதியவனை இதன் காரணமாகவே பாஸ்கரன் தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது.

பாஸ்கரனை பிடிக்க தனிப்படை போலீஸார் வெவ்வேறு ஏரியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாஸ்கரன் பிடிபட்டால் கொலைக்கான பின்னணி குறித்து முழுத் தகவல்களும் தெரிய வரும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close