ஜாக்டோ - ஜியோ தொடர் கைது : ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் பலி!!!

சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கைது. கைது செய்யப்பட்ட ஒருவர் பலி.

சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முற்றுகை போராட்டத்தை தடுக்க போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இதில் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் பலியாகியுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் அண்மையில் போராட்டம் நடத்தி வந்தது. இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்தது. இந்நிலையில் போராட்டத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை நேற்று போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

சென்னையில் முக்கிய பகுதிகள் உட்பட தலைமை செயலகம் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்த பேருந்துகளில் போலீசார் சோதனை செய்தனர். கூட்டமாக வரும் பேருந்துகளை மறித்து, பேருந்தில் இருப்பவர்களின் அடையாள அட்டையைக் காட்டுமாறு போலீசார் சோதனையிட்டனர். இந்நிலையில் பேருந்துகளில் உள்ளவர்கள் போராட்டத்திற்கு வருவது உறுதியானால் அவர்களை அங்கேயே கைது செய்தனர். இவ்வாறு சென்னை நோக்கி வரக்கூடிய பேருந்து மற்றும் வாகனங்களை, பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய இடங்களில் பரங்கிமலை போலீசார் மறித்துச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் சென்னை அண்ணாசாலையிலும், கடற்கரைச் சாலை பகுதிகளிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இன்று காலை முதல் தலைமை செயலகம் நோக்கி வருபவர்கள் வரும் வழியிலேயே கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தலைமை செயலகம் செல்ல இயலாததால், அமைப்பினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சேப்பாக்கம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையம், வாலஜா சாலை, அண்ணாசாலை உட்பட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் சாலை மறியல் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், தமிழக முதல்வர் அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் பள்ளி மற்றும் பிற இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 5 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பார்வை குறைபாடு கொண்ட ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட ஒரு சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ஆசிரியர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. ஊழியர்களின் கைது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இது போன்ற அடக்கு முறைகை ஏற்றுக் கொள்ள முடியாது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனே விடுவித்து அவர்களுடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்று கூறினார்.

சென்னையில் தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டத்தில் இன்னும் சிலரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

×Close
×Close