Advertisment

ஜாக்டோ-ஜியோ போராட்டம் : நீதித்துறையை அவமதித்த அரசு ஊழியர் பாளை. சிறையில் அடைப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தையொட்டி சமூக வலைதளத்தில் நீதித்துறையை அவமதித்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
jactto-geo protest, government employee arrest for defaming judge, tirunelveli government employee arrested

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தையொட்டி நீதித்துறையை அவமதித்த அரசு ஊழியர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

ஜாக்டோ-ஜியோ என அழைக்கப்படும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மூலமாக அண்மையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர்.

இவர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களும் பள்ளிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது நீதிபதி கிருபாகரன், இந்தப் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவது குறித்து குறிப்பிட்டு அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினார். ‘நீட்’ உள்ளிட்ட தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த அளவிலேயே தேர்ச்சி பெற்றிருப்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சிலர் நீதித்துறையை அவமதிக்கும் விதமாக மீம்ஸ்களை வெளியிட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த அமர்வில் இது தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ‘அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ விமர்சித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கிறீர்கள். நீதித்துறை உங்களது செயல்பாடுகளையும் விமர்சிப்பதால், இதில் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்களா?’ என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீதித்துறையை அவதூறாக விமர்சித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர், முருகன் (47). இவர் பாளையங்கோட்டை திருமால் நகரை சேர்ந்தவர். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் அரசுப் பணிமனை ஒன்றில் ஊழியராக பணி புரிகிறார் இவர்.

இவர் மீது அரசுப் பணி விதிகளை மீறுதல் (ஐபிசி 188), அவதூறு செய்தல் (ஐபிசி 500), உள்நோக்கத்துடன் அமைதியை சீர்குலைத்தல் (ஐபிசி 504), அரசு அமைப்புக்கு எதிராக பயமுறுத்தும் நடவடிக்கை (ஐபிசி 505-1பி) ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.

அதேபோல, சென்னையை அடுத்த பெருங்களத்தூரை சேர்ந்த பி.சுபாஷ் சந்திரபோஸும்(64) நீதித்துறை மீது அவதூறு பரப்பும் விதமாக செயல்பட்டார். மாநில அரசின் உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கை துறை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவரை, சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இவரை போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த நடவடிக்கைகள் குறித்து, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.வெங்கடரமணி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் கவனத்திற்கு கொண்டு சென்றார். அந்தத் தகவலை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து நீதிபதி கூறுகையில், ‘கோர்ட்டின் மாண்பை பாதிக்கும் வகையிலும் தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் யார் மீதும் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை.

இந்த வழக்குகளுக்கு போலீஸார் எந்த சிறப்பு கவனத்தையும் செலுத்தத் தேவையில்லை. மற்ற வழக்குகளை சட்டப்படி எப்படி விசாரிப்பீர்களோ, அதே அணுகுமுறையை கடைபிடியுங்கள்’ என அறிவுறுத்தினார்.

நீதிமன்றம் மற்றும் போலீஸ் நடவடிக்கையை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீதித்துறை மீதான விமர்சனங்களை பலரும் அவசமாக நீக்கிய நிகழ்வுகளும் நடந்தன.

 

Chennai High Court Justice Kirubakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment