ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் தியாகராஜன் பலி!!!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டொ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஆங்காங்கே சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் பள்ளி உட்பட பிற இடங்களில் அடைத்து வைத்தனர். இது போல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டோரில் சிலரை எழும்பூர் தனியார் பள்ளியில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது உள்ளே கைதாகி இருந்த ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாபநாசத்தை சேர்ந்த ஆசிரியர் தியாகராஜன் இன்று நடைபெற இருந்த தலைமை செயலக முற்றுகை போராட்டத்தில் பங்கேற்கச் சென்னை வந்தார். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்து எழும்பூர் தனியார் பள்ளியில் அடைத்து வைத்தனர். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தியாகராஜன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று தெரிவித்தனர். இவர் பார்வை குறைபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தை அடுத்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரின் உடல் தற்போது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடலை மீட்கப் போராட்டத்தில் ஈடுபட்டோர் முயற்சித்து வருகின்றனர்.

×Close
×Close