ஜேக்டோ-ஜியோ சென்னையில் இன்று போராட்டம் : கோட்டை நோக்கி பேரணி சென்றால் கைது செய்ய போலீஸ் தயார்

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கூடும் இவர்கள் அங்கிருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.

By: Updated: August 5, 2017, 09:29:45 AM

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் இன்று சென்னையில் போராட்டம் நடத்துகிறார்கள். கோட்டை நோக்கி பேரணியாக சென்றால், கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜேக்டோ’வும், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ‘ஜியோ’வும் இணைந்து சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தன. குறிப்பாக, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003 முதல் அமல்படுத்த வேண்டும்; 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதுடன், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்; ஊதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வரை 1-1-2016 முதல் முன் தேதியிட்டு 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் ஆகியன அவர்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்த 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் சென்னையில் திரள்கிறார்கள். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கூடும் இவர்கள் அங்கிருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்கிறார்கள்.

இந்தப் போராட்டத்தை கருத்தில் கொண்டே ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீதரை அவசரமாக நியமனம் செய்து ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும் ஜேக்டோ-ஜியோ நிர்வாகிகள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து ஜேக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்த இருப்பதாக ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இதையொட்டி இன்று காலையிலேயே சேப்பாக்கம், வாலஜா சாலையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டையை நோக்கி ஜேக்டோ – ஜியோ அமைப்பினர் பேரணி செல்ல முயன்றால், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக அரசு பஸ்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jactto geo rally towards tamilnadu secretariat tomorrow teachers from all over tamilnadu will assemble

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X