ஜெ.ஜெயலலிதா எனும் நான்…

Jayalalitha Memorial Day: துடித்த அந்த இதயம் என்னவெல்லாம் கூற நினைத்திருக்குமோ? உருண்ட விழிகளில் என்ன நினைவுகளெல்லாம் அலையோடியிருக்குமோ?

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

Jayalalitha 2-nd Death Anniversary:  ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்..’, இந்த சிம்மக் குரலை கேட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன.

35 ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தை கலக்கியவர், வெறும் 17 லட்சம் உறுப்பினர்களை வைத்திருந்த அ.தி.மு.க.வை, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றிக் காட்டியவர், 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர் வெற்றியை பெற்று ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர்.

2014 பாராளுமன்றத் தேர்தலில், ‘மோடியா.. இல்லை, இந்த லேடியா?’ என பிரச்சாரம் செய்து, 37 எம்.பி.க்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அண்ணா தி.மு.க.வை வார்த்தெடுத்தவர். தமிழக அரசியலை மட்டுமல்ல, தேசிய அரசியலையும் போயஸ் தோட்டத்தின் வாசலுக்கு வரவழைத்த சாதனையாளர் தான் ஜெயலலிதா.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு நாள் நாளை டிசம்பர் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தொடங்கி இறப்பு வரையில் தற்போது சர்ச்சையாகியிருக்கும் சூழலில், சர்ச்சையில் சிக்க விரும்பாத நபராகவே தான் ஜெயலலிதா தன் வாழ்வை கடக்க விரும்பியிருக்கிறார்.

ஜெயலலிதா கடைசி நிகழ்ச்சி

கடந்த 2016, செப்.21-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா தான் ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தவர், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கும் என நம்புகிறேன்!” என பேசினார்.

இன்றைய துணை ஜனாதிபதியும், அன்றைய மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கலந்து கொண்ட இவ்விழாவில், கோட்டையில் இருந்தபடியே கொடியசைத்து ரயில்சேவையை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இது தான் அவர் கலந்து கொள்ளும் கடைசி பொதுவிழா என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா

காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக, 2016, செப்.22-ம் தேதி இரவு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனது, அவர் கட்சி தொண்டர்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகமெங்கும் இருந்து சாரை சாரையாக அப்பல்லோவிற்கு படையெடுத்தனர்.

அடுத்த நாள் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவிற்கு இருந்த காய்ச்சல் குணமடைந்துவிட்டது. தான் வழக்கமாக உண்ணும் உணவையே எடுத்துக் கொள்கிறார்” என்றனர். அதே 23ம் தேதியன்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், ‘ஜெயலலிதா முற்றிலுமாக குணமடைந்து விட்டார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகலாம்’ என்று சொன்னார்கள். ஒரிரு நாட்களில் ஜெ. போயஸ் தோட்டம் திரும்பிவிடுவார் எனத் தொண்டர்களும், தமிழக மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இயற்கை வேறு விடை வைத்திருந்தது.

செப்டம்பர் 24ம் தேதி, யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து நலம் விசாரிப்பு வந்தது. “முதலமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என அறிக்கை வெளியிட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

செப்டம்பர் 25ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ”முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்ல தேவையில்லை” என அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.

ஜெயலலிதா பெயரில் அறிக்கை

செப்டம்பர் 26ம் தேதி, முதன்முறையாக ஜெயலலிதா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்றதோடு, அதற்குண்டான வேட்பாளர் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்தார். அவரது கையெழுத்தோடு இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி உதவி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டதாக தமிழக அரசின் அறிக்கை வெளியானது.

செப்டம்பர் 27ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கு தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும், சில அறிவுறைகள் வழங்கியதாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டது. இச்செய்திக்குறிப்பு வெளியானதும், தி.மு.க தலைவர் கருணாநிதி, “முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், அந்த ஆலோசனைக்கூட்டத்தின் போட்டோவை வெளியிட வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா 2-வது அறிக்கை

ஜெயலலிதாவின் பெயரில் இரண்டாவது அறிக்கையாக, அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் அறிவிப்பு செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. இதற்கடுத்த நாட்களில், ஜெயலலிதா சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அப்பல்லோ கூறியது. இதே கருத்தை, செப்டம்பர் 30ம் தேதி லண்டனில் இருந்து வந்திருந்த டாக்டர்.ரிச்சர்ட் பீலே, “முதல்வரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

அக்டோபர் 1ம் தேதி அப்பல்லோ வந்த அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ.வின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் மயக்கநிலையில் இருந்ததாக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதமும் எழுதினார்.

அப்பல்லோ வெளியிட்ட முழு அறிக்கை

அக்டோபர் 2ம் தேதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழு அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. “சிகிச்சைக்கு முதல்வர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இங்கேயே இருந்து அரசுப் பணிகளை அவர் மேற்கொள்வார்” என அறிக்கை கூறியது.

ஜெயலலிதா உடல்நிலம் தேறி வருகிறார், ஓரிரு நாட்கள் தங்கியிருந்தால் போதும் என கூறிய அப்பல்லோ, அக்டோபர் 6ம் தேதி விஷயத்தை மாற்றிச் சொன்னது. ஜெயலலிதாவின் உடலில் நோய்தொற்று ஏற்பட்டதாகவும், அவர் நீண்ட நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் சென்னை வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தவர்கள், மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

ஜெயலலிதாவின் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மூச்சு விட சிரமப்பட்டதால், அக்டோபர் 10ம் தேதி அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. மருத்துவமனைக்கு நேரில் வந்த அப்போதைய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் பொறுப்பேற்ற ஓ.பி.எஸ்.

அக்டோபர் 11-ம் தேதி, எதிர்பார்த்த நிர்வாக மாற்றங்கள் நடைபெற்றது. ஜெயலலிதா வகித்த முதல்வர் பொறுப்புகள், அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். இதற்கு அடுத்தநாள், வெங்கய்ய நாயுடுவோடு மருத்துவமனைக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஜெ.வின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

அக்டோபர் 13ம் தேதி, ப்ரிட்டனில் இருந்து மூன்றாவது முறையாக வந்த டாக்டர்.ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்களுடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கண்காணித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் பேச ஆரம்பித்திருப்பதாகவும் அக்டோபர் 21ம் தேதி அப்பல்லோ கூறியது.

ஜெயலலிதா வீடு திரும்பலாம் எனக் கூறிய பிரதாப் ரெட்டி

அக்டோபர் 28ம் தேதி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை இட்டது சர்ச்சையை கிளப்பியது. வேட்புமனுவில் கைரேகை பெறும்போது, ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக பின்னாளில் அப்பல்லோ மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

நவம்பர் 2ம் தேதி அப்பல்லோவில் இருந்து நம்பிக்கை தரும் அறிக்கை வெளியானது. “முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது” என அப்பல்லோ கூறியது. நவம்பர் 5ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோவின் நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி, “ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறியுள்ளது. அவர் எப்போது விரும்புகிறாரோ, அப்போது அவர் வீட்டிற்கு செல்லலாம்” எனக் கூறினார். நவம்பர் 12ம் தேதி இரண்டாவது முறை பேட்டியளித்த ரெட்டி, “சாதாரண வார்டுக்கு மாற்றுவது குறித்து ஜெயலலிதா தான் முடிவெடுக்க வேண்டும். அதுவரையில் அவரது உடல்நிலை கண்காணிப்பிலேயே இருக்கும்” என்றார்.

யாரும் எதிர்பாராத திருப்பமாக, ஜெயலலிதாவே எழுதியது என ஒரு கடிதம் நவம்பர் 13ம் தேதி வெளியானது. அதில், “நான் குணமடைந்து கொண்டே வருகிறேன். மறு பிறவி எடுத்துள்ளேன். திரும்பவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் இடைத் தேர்தலுக்காக முழுவீச்சில் பாடுபட வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தநாள், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஜெயலலிதா பெயரில் இரங்கல் செய்தி வெளியானது.

பூரண குணமடைந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு

மூன்றாவது முறையாக நவம்பர் 18ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதாப் சி.ரெட்டி, “நுரையீரல் தொற்று சரியாகி, சுவாசக் குழாயின்றி அவர் மூச்சு விடுகிறார். ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார்” என்றார். இதற்கு அடுத்த நாள், ஜெயலலிதா பூரண குணமடைந்து இருப்பதால், தனி வார்டுக்கு மாற்றப்படுகிறார் என அப்போலோவில் இருந்து அறிவிப்பு வெளியானது.

நவம்பர் 22ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, “மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள். நான் குணமடைந்து வந்து மீண்டும் மக்கள் பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதே நாளில், ஜெயலலிதாவின் பெயரில் இரண்டு அரசு அறிவிப்புகளும் வெளியாகின.

காலையில் நம்பிக்கை அறிவிப்பு… மாலையில் அதிர்ச்சி தகவல்

டிசம்பர் 4ம் தேதி காலையில், முதல்வர் ஆரோக்கியமாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அ.தி.மு.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அன்று மாலையிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. மாலை 4:20 மணியளவில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சி.பி.ஆர். எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு, நெஞ்சுக்கூட்டை பிளந்து, இதயத்திற்கு மசாஜ் செய்யும் ‘செனாடமி’ என்னும் சிகிச்சையும் மருத்துவர்கள் அளித்து பார்த்தனர். இதயத்துடிப்பு வரவில்லை என்றதும், அடுத்த 20 நிமிடங்களில் ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக அப்பல்லோ கூறியது.

டிசம்பர் 5ம் தேதி காலை 10:30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ வந்தனர். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட ‘செனாடமி’ மற்றும் ‘எக்மோ’ சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். நேரம் செல்லச் செல்ல ஜெ.வின் உடல்நிலை கவலைக்கிடமாகிக் கொண்டே சென்றது. அன்றிரவு, சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மறைந்ததாக தமிழகத்தையே நிலைகுலையச் செய்யும் அந்த அறிவிப்பை அப்பல்லோ வெளியிட்டது. “அவரை பிழைக்க வைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டோம். சிகிச்சை பலனின்றி இன்று, டிச.5-ம் தேதி இரவு 11:30 மணியளவில் அவர் மறைந்துவிட்டார்…”, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட கடைசி செய்திக் குறிப்பு தான் இது.

மருத்துவமனையில் 75 நாட்கள், ஊசி, மருந்து மாத்திரைகளுடன் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர், இறுதியாக நிரந்தர துயில் கொண்டுவிட்டார்.

மருத்துவர் சாட்சியம்

கடந்த நவம்பர் 28ம் தேதி, ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரான அப்பல்லோ மயக்கவியல் நிபுணர் மினல் வோரா, “டிசம்பர் 4ம் தேதி இரவு, ‘எக்மோ’ பொருத்தப்பட்ட பின்னர் அவரது கருவிழிகளில் அசைவு தெரிந்தது. சிறிது மூச்சுவிட்டார். 5ம் தேதி அதிகாலை 3:20 மணியளவில், ‘எக்மோ’வின் துணையில்லாமல் அவரது இதயம் அரை மணிநேரம் துடித்தது. பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.” என்றுள்ளார். துடித்த அந்த இதயம் என்னவெல்லாம் கூற நினைத்திருக்குமோ? உருண்ட விழிகளில் என்ன நினைவுகளெல்லாம் அலையோடியிருக்குமோ?… இது ஜெயலலிதாவிற்கே வெளிச்சம்.

1982ல் அ.தி.மு.க.வில் இணைந்ததில் தொடங்கி, 2016ல் மறைந்தது வரையில் எத்தனையோ போராட்டங்களை கடந்து வந்தவர், தனது இறப்பையும் ஒருபோராட்டமாகவே கடந்து சென்றுள்ளார். அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும் அவர் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் வேறு எவராலும் எடுத்திருக்க முடியாது. தொட்டில் குழந்தை திட்டம் முதல், காவிரி நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வைத்தது வரை அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் காலம் கடந்தும் பேசும். அவர் என்றுமே இரும்பு பெண்மணி தான்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jayalalitha memorial day 2 nd death anniversary

Next Story
மாணவர்களுக்கு சோக செய்தி…இனி மழை வந்தால் லீவ் கிடையாது!மழைக்கால விடுமுறை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com