தர்மபுரி மாணவிகள் எரிப்பு குற்றவாளிகள் ரிலீஸ்? ஜெ. பிறந்த நாள் ஷாக்!

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி 1500 கைதிகளை விடுவிக்க இருப்பதாக தெரிகிறது. அவர்களில் தர்மபுரி மாணவிகள் எரிப்புக் குற்றவாளிகளும் அடங்குகிறார்களா?

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி 1500 கைதிகளை விடுவிக்க இருப்பதாக தெரிகிறது. அவர்களில் தர்மபுரி மாணவிகள் எரிப்புக் குற்றவாளிகளும் அடங்குகிறார்களா?

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு சிறைகளில் நீண்ட காலம் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன. இஸ்லாமிய அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் நீண்ட காலமாக முன் வைத்து வரும் கோரிக்கை இது!

ஜெயலலிதா பிறந்த தினமான இன்று (பிப்ரவரி 24) அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் இருக்கும் சுமார் 1500 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

தர்மபுரி மாணவிகள் எரிப்பு வழக்கில் தொடர்புடையை மூவரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக தகவல் பரவி, பலரையும் அதிர வைத்திருக்கிறது. தமிழகத்தை மட்டுமல்லாது, இந்தியாவையே உறைய வைத்த அந்த பழைய நிகழ்வு தொடர்பான ஒரு ஃப்ளாஷ்பேக்!

கடந்த 2000-ம் ஆண்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த வன்முறையில் தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரிப் பேருந்துக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ்ஸில் இருந்த கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் பலியாகினர்

இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், அதிமுகவைச் சேர்ந்த முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2007-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இது தவிர சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 25 பேருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தபோதும், மேற்கண்ட தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜிஎஸ் சிங்வி, பி.எஸ்.சௌகான் ஆகியோர் விசாரித்தனர். சமூகத்துக்கு எதிரான காட்டுமிராண்டித் தனமான, ஏற்றுக்கொள்ள முடியாத செயல் எனக் கூறிய நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்தனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மூவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மறு ஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச், குற்றவாளிகள் மூவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தனர். எனினும் சிறையிலேயே இருந்து வருகிறார்கள்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படும் 1500 கைதிகளில் மேற்படி மூவரும் இடம் பெற்றிருப்பதாகவும், அவர்களுக்காகவே இந்த விடுதலையை எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதித்திருப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. முனியப்பன், நெடுஞ்செழியன், ரவீந்திரன் ஆகிய 3 அதிமுக பிரமுகர்களும் விடுதலை ஆனால் அது பெரும் சர்ச்சையைக் கிளப்பும்.

கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு அண்ணா பிறந்த நாளையொட்டி 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த 1405 கைதிகளை விடுவித்தது. அதில் மதுரை மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதான திமுக.வினர் 8 பேரும் அடக்கம்! அவர்கள் மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக உலா வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்களை விடுதலை செய்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. அதே பாதையில் எடப்பாடி அரசும் பயணிக்கிறதா? என்பதே இப்போதைய கேள்வி!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close