ஜெயலலிதா முழு உருவ வெண்கலச் சிலை இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி திறக்கிறார்கள்.
ஜெயலலிதா, தமிழக அரசியலில் அபார உயரத்தை எட்டிப் பிடித்தவர்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் சென்றவர். அவர் உருவாக்கிய ஆட்சியையும், கட்சியையும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிர்வகித்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் இன்று அதிமுக.வினரால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவருடைய சிலை திறப்பு விழா இன்று நடக்கிறது. இதற்காக ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி இருப்பது போன்று 7 அடி உயரத்தில் முழு உருவ வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை அருகே அந்த சிலை பீடத்தில் நிறுவப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைக்க உள்ளனர். இன்று காலை 10.50 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
ஜெயலலிதா தொடங்கிய நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் டி.டி.வி.தினகரன் அணியினர் கட்டுப்பாட்டில் இருப்பதால், அ.தி.மு.க.வுக்கு என்று ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் தொடங்கப்படுகிறது. அந்த நாளிதழை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்துவைக்கின்றனர்.
ஜெயலலிதா பிறந்தநாளை குறிக்கும் வகையில் 70 அடி நீளத்தில் கேக் வெட்டப்படுகிறது. அவருடைய பிறந்தநாள் மலரும் வெளியிடப்பட உள்ளது. அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம், ரத்ததான முகாம், இலவச மருத்துவ முகாம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவாயிலில் வாழைமரம், தென்னை ஓலை, பழங்களை கொண்டு அலங்கார வளைவு தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை சுற்றிலும் ஜெயலலிதாவின் புகழை போற்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கொடிகளும் வழி நெடுக கட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையே விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று பெருமளவில் அங்கு தொண்டர்கள் திரள்கிறார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை இன்று மாலை 6 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.