ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி: பத்திரிகை சுதந்திரம் குறித்து முக்கிய தீர்ப்பு

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் குறித்து முக்கிய தீர்ப்பை வழங்கியது.

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் குறித்து முக்கிய தீர்ப்பை வழங்கியது. பத்திரிக்கைச் சுதந்திரம் தடுக்கப்பட்டால் நாட்டின் ஜனநாயம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சசிகலா தூண்டுதலின் பெயரில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, செங்கோட்டையனை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கியதாக இந்தியா டுடே பத்திரிக்கையில் செய்தி கடந்த 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதியன்று வெளியானது. இதனையடுத்து அந்த பத்திரிக்கையின் மீது ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இந்தியா டுடே நிர்வாகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், ‘இந்திய ஜனநாயக நாட்டில் உள்ள 4 தூண்களில் ஒன்றாக பத்திரிக்கைகள் உள்ளன. பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்பட்டால் நாட்டின் ஜனநாயகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். பத்திரிக்கையின் குரல் நசுக்கப்பட்டால் நாடு சர்வாதிகார நாடாக மாறக்கூடும். இதனால் நமது நாட்டுக்காக உழைத்தவர்கள் மற்றும் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் உழைப்பு வீணாகும். பத்திரிக்கைகள் சில நேரங்களில் தவறு செய்ய நேரிடும். அதற்காக நாட்டின் ஜனநாயகத்தை காக்கும் பத்திரிக்கைகளின் பங்கை நாம் மறந்து விடக்கூடாது.

பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, பத்திரிக்கைகளில் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் பத்ரிக்கைகள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளக்கூடாது. பத்திரிக்கைகள் நாட்டில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளை பொது மக்களுக்கு கொண்டு செல்லும் கடமையை கொண்டுள்ளது’ என கருத்து தெரிவித்த நீதிபதி, இந்தியா டுடே பத்திரிக்கையின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close