Advertisment

ஜெயலலிதா படம் திறப்பு : சட்டமன்றம் காணாத சர்ச்சை!

ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி சர்ச்சை உருவானது இல்லை.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Freedom of Press, Jeyalalitha Case On India Today Dismissed, ஜெயலலிதா அவதூறு வழக்கு, இந்தியா டுடே, பத்திரிகை சுதந்திரம்

Freedom of Press, Jeyalalitha Case On India Today Dismissed, ஜெயலலிதா அவதூறு வழக்கு, இந்தியா டுடே, பத்திரிகை சுதந்திரம்

ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது பெரும் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி சர்ச்சை உருவானது இல்லை.

Advertisment

ஜெயலலிதா, தமிழ்நாட்டில் நீண்ட காலம் முதல்வர் பதவியை வகித்தவர்! தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சியாக அதிமுக.வை உருவாக்கி, அதன் தலைமைப் பொறுப்பிலும் இருந்தவர்! தமிழ்நாட்டில் பெருமளவில் தொண்டர்களையும், தனக்கென வாக்கு வங்கியையும் கொண்டிருந்தவர்! அவர் உருவாக்கி வைத்த ஆட்சிதான் இன்றும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா, முந்தைய தனது ஆட்சி காலத்திலேயே பல திட்டங்களுக்கு தனது பெயரை சூட்டியவர்தான். அவருக்காக விண் முட்டும் அளவுக்கு கட் அவுட்களையும், பேனர்களையும் வைத்து அவரது கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, அரசு அதிகாரிகளே விழா எடுத்த நிகழ்வுகள் உண்டு. ஆனால் இன்று ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி காலத்திலேயே, அவர் நீண்ட காலம் பணியாற்றிய சட்டமன்றத்தில் அவரது உருவப் படம் திறப்பதே சர்ச்சை ஆகியிருக்கிறது.

யார், யாருக்கு படம்?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர்கள் அத்தனை பேருக்கும் உருவப் படம் திறக்கப்பட வேண்டும் என விதிமுறை எதுவும் கிடையாது. அதேசமயம், மக்களுக்காக உழைத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆட்சியும் தங்கள் காலத்தில் படங்களை திறப்பதை வாடிக்கையாக வைத்திருந்தன.

அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 10 புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கின்றன. அவை, 1.திருவள்ளுவர் 2.மகாத்மா காந்தி 3.ராஜாஜி 4.பெரியார் 5.காமராஜர் 6.அண்ணா 7. காயிதே மில்லத் 8. அம்பேத்கர் 9.முத்துராமலிங்க தேவர் 10.எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதா படத்தை இந்த வரிசையில் பிப்ரவரி 12-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் தனபால் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக பிரதமர் மோடியை இந்த விழாவுக்கு ஓராண்டுக்கு முன்பே அழைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியதால், மோடி இந்த சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை.

தமிழகத்தில் பாஜக.வைத் தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தப் படத் திறப்பைக் கண்டித்திருக்கின்றன. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அவர் இறந்ததால் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே அவரது படத்தை திறப்பது முறையில்லை. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார்கள்’ என அறிவித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரணி, ‘ஜெயலலிதா படத்தை திறப்பதில் தப்பில்லை’ என கூறியதாக காலையில் செய்திகள் வெளியாகின. ஆனால் பிப்ரவரி 11-ம் தேதி மாலை 7 மணிக்கு காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலினின் பேட்டியை அப்படியே வழிமொழிந்து தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க மாட்டார்கள் என கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பதை கண்டித்து கருத்து கூறினார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்திருக்கிறது. அவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது’ என அறிக்கை விட்டிருக்கிறார்.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ‘ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறப்பது சட்டப்படி சரியா என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி யோசிக்க வேண்டும்’ என சற்றே மென்மையாக கருத்து கூறியிருக்கிறார். மரணமடைந்துவிட்ட ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிப்பதை தவிர்க்கும் நோக்கில் இந்தக் கருத்தை அவர் கூறியதாக தெரிகிறது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும், இதை சட்டரீதியாக தடுக்க முயற்சிப்போம் என்றார். திமுக எம்.எல்.ஏ. சேப்பாக்கம் ஜெ.அன்பழகன் சட்டமன்ற செயலாளர் பூபதியை சந்தித்து, ஜெயலலிதா படம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடிதம் கொடுத்திருக்கிறார். படத் திறப்புவிழா நடைபெறும் அதே வேளையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து ஜெ.அன்பழகன் தரப்பில் முறையிடப்படும் என தெரிகிறது.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் ‘குற்றவாளி’ ஜெயலலிதா படங்களை மாட்டக்கூடாது என ஏற்கனவே ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே ஜெ.அன்பழகன் இன்று முறையீடை வைப்பார். ஆனால் அதற்குள்ளாக ஜெயலலிதா படத் திறப்பு விழா முடிந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.

நீதிமன்றத்தின் தலையீடை தவிர்க்கவே வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பை வெளியிட்டு, திங்கட்கிழமை காலையில் ஜெயலலிதா படத்தை அரசுத் தரப்பு திறப்பதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. ஆனாலும் அரசுத் தரப்பில் இதைப் பற்றி கவலைப்படவில்லை. ‘ஜெயலலிதா படத்தை நாடாளுமன்றத்திலேயே திறக்கலாம்’ என கூறியிருக்கிறார் தமிழக அமைச்சர் ஜெயகுமார்.

திட்டமிட்டபடி திறப்புவிழா நடக்கிறது.

 

Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment