ஜோசப் கருணை இல்லம்: முதியவர்களை இன்றே திருப்பி அனுப்ப உத்தரவு!

ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே திருப்பி அனுப்ப உத்தரவு

பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியவர்களை இன்றே, அவ்வில்லத்துக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள பாலேஸ்வரம் என்ற கிராமத்தில் புனித ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆதரவற்ற முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இந்த இல்லத்தில் இறக்கும் முதியோர்களின் உடலில் இருந்து எலும்புகள் பிரித்தெடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்த முதியோர்களை மீட்டு, பல்வேறு அரசு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்கள் பலர், முறையான பராமரிப்பு இல்லாமல் இறந்துள்ளனர். தங்களிடம் அனுமதி பெறாமலே, இல்லத்தில் இருந்து அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். ஆகவே, சட்ட விரோத காவலில் இருக்கும் முதியோர்களை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி, கருணை இல்ல நிர்வாகி தாமஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்தமனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இல்லத்தில் இருந்து 294 முதியோர்களை சமூக நலத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களுக்கு, நாங்கள் தான் பாதுகாவலர்கள். எங்களுக்கு எதிராக, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அனுமதி பெறாமல், அதேநேரத்தில், முறையாக அனுமதி பெற்று செயல்படும், எங்கள் இல்லத்தில் இருந்து முதியோர்களை அழைத்து சென்றது சட்டவிரோத செயல் ஆகும். மேலும், அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர், முறையான பராமரிப்பு இல்லாததால் இறந்துள்ளனர் என்று வாதிட்டார்.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 12 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் பல்வேறு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த இல்லத்தின் நிர்வாகி மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு அது தற்போது நிலுவையில் உள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அதன் அறிக்கை எங்கே? அவர்கள் செய்யாவிட்டால் குற்றம் எனில், அதை அரசு செய்தால் சரியா? இந்த விசயத்தில் மதச்சாயம் பூச வேண்டாம் என்று எச்சரித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், பாலேஸ்வரம் புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதியோர்களை, அவ்வில்லத்துக்கு இன்றே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி, நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை நாளை தள்ளிவைத்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close