மூத்த வழக்கறிஞர்கள் பைகளை நிரப்புவதிலேயே கவனம்! - நீதிபதி கிருபாகரன் வேதனை

எட்டாம் வகுப்பையே தாண்டாத ஒருவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்று வழக்கறிஞராகி, இன்று சங்கமும் ஆரம்பித்துள்ளார்

கடந்த 8 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் தொழில் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்ட நிலையில், மூத்த வழக்கறிஞர்கள் பணம் சேர்ப்பதில் மட்டுமே குறியாக உள்ளதாக நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலுக்கான புதிய விதிமுறைகள் தொடர்பான வழக்கு கடந்த வாரம் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணை நடைபெற்று, வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 16 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், தமிழரசன், முத்துராமலிங்கம் ஆகியோர் நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று ஆஜராகி, பார் கவுன்சில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைவதால், வழக்கின் தீர்ப்பை இன்றே வழங்க வேண்டும் என முறையிட்டனர்.

இதைக்கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என தெரிவித்தார். வழக்கறிஞர்கள் சமீப கால நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலின் மதிப்பை கெடுத்துக் கொண்டிருப்பதாக கருத்து தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழில் முழுவதுமாக சீரழிந்துவிட்டது.

மூத்த வழக்கறிஞர்களும் இந்த புனிதமான தொழிலை காக்க தயாராக இல்லாமல் தங்கள் பைகளை நிரப்புவதிலேயே குறியாக உள்ளதாக தெரிவித்தார். எட்டாம் வகுப்பையே தாண்டாத ஒருவர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பட்டம் பெற்று வழக்கறிஞராகி, இன்று சங்கமும் ஆரம்பித்துள்ளார். அவருக்கு பாரிமுனையில் மிகப் பெரிய கட் அவுட், அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் புகைப்படமும் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, ஓய்வு பெற்ற சில நீதிபதிகளும் இதுபோன்ற வழக்கறிஞர்களுக்கு துணையாக இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் பாதுகாப்பு இல்லையென்றால் உயர் நீதிமன்றத்தின் நிலை மிக மோசமாக இருந்திருக்கும் எனவும் தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள “ஒய்” பிரிவு பாதுகாப்பு “இசட்” பிரிவாக மாறியிருக்கும் எனவும் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.

×Close
×Close