“செங்கோட்டையனை முதல்வர் ஆக்க நினைத்தோம்” டிடிவி தினகரன் தரப்பு அதிரடி தகவல்

செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என எண்ணியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

செங்கோட்டையனை முதல்வராக்க வேண்டும் என எண்ணியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.

செங்கோட்டையன், அதிமுக மூத்த உறுப்பினர்களில் ஒருவர்! சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முதல்வர் பதவிக்கு செங்கோட்டையன் பெயரும் பரிசீலிக்கப்பட்டது. ஆனாலும் அப்போது எம்.எல்.ஏ.க்களை வசப்படுத்தும் வாய்ப்புகள் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்ததால், அவரை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்தனர்.

செங்கோட்டையன் பெயர் இடையிடையே முதல்வர் பதவியுடன் முடிச்சு போடப்பட்டு மீடியாவில் வெளியாகிக் கொண்டேதான் இருந்தது. இந்தச் சூழலில் முதல் முறையாக செங்கோட்டையனை முதல்வர் பதவிக்கு தேர்வு செய்ய விரும்பியதாக டிடிவி தினகரன் ஆதரவு தரப்பில் நீதிமன்றத்தில் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விவரம் வருமாறு :

தமிழக அரசை கலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறி டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏகள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப்பேரவை தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அதனை ரத்து செய்ய கோரி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று (10-ம் தேதி) விசாரணைக்கு வந்தது

அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிட்டார். அவர் வாதிடும்போது, கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. அவரது உத்தரவை எதிர்த்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றார்.

இந்த வாதங்களுக்கு பதிலளித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், பேரவைத் தலைவர் எங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியவுடன் அதற்கு பதில் தர உரிய கால அவகாசம் தரவில்லை. மேலும், சம்மந்தப்பட்ட 4 பேரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரினோம். அதற்கு பேரவைத் தலைவர் சம்மதிக்கவில்லை.

இரண்டு தொலைக்காட்சி நிருபர்கள், கொறடா, முதல்வர் பழனிச்சாமி ஆகியோரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரினோம். அனுமதி தரப்படவில்லை. மேலும், எங்கள் தரப்பினர் கேட்ட ஆவணங்களையும் பேரவைத் தலைவர் தரப்பு தரவில்லை. ஆளுநரிடம் மனு கொடுத்தோம் என்ற ஒரே காரணத்தைக் காட்டி தகுதி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.’ என்றார்.

தொடர்ந்து நடந்த விவாதம் :

நீதிபதிகள்: எந்த நோக்கத்துடன் ஆளுநரிடம் மனு கொடுத்தீர்கள்.

பி.எஸ்.ராமன்: எடப்பாடி பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்பதற்காகத்தான். அவர் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியிருப்பதால் அந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தோம்.

நீதிபதிகள்: ஆளுநரிடம் மனு கொடுத்தது சரியா?, தவறா?

பி.எஸ்.ராமன்: ஆளுநரிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார் என்பது எங்கள் நம்பிக்கை. நடவடிக்கை எடுக்காவிட்டால் அது குறித்து எங்களுக்கு கவலையில்லை. அவரிடம் மனு கொடுத்தது சரியா, தவறா என்பது பிரச்னையல்ல. அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் அதிக அதிகாரம் உள்ளவரிடம் மனு கொடுத்தோம். எடியூரப்பா வழக்கிலும் இதே பிரச்னை இருந்தது. ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காக எங்களை பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. கட்சியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.

நீதிபதிகள்: எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிவிட்டு யாரை முதல்வராக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள்?

பி.எஸ்.ராமன்: கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனை முதல்வராக நியமிக்கப்பட்ட வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பியே ஆளுநரிடம் மனு கொடுத்தோம். கட்சியை தேர்தல் ஆணையம் முடக்கிவைத்திருந்தது. அப்போது உட்கட்சி பிரச்சினைகளை குறித்து முதல்வரை சந்திக்க வாய்ப்பு கோரியும் வாய்ப்புகள் அளிக்கவில்லை. எனவே தான் ஆளுநரை சந்தித்தோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் எழுத்துபூர்வ வாதங்களை வரும் 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணை தள்ளிவைத்தனர்.

18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் இவர்களுக்கு சாதகமான உத்தரவு வரும்பட்சத்தில் டிடிவி தினகரன் உடனடியாக ஆட்சியை கவிழ்க்க விரும்ப மாட்டார் என்றும், செங்கோட்டையனை முதல்வர் ஆக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அப்போதே செங்கோட்டையனை முதல்வர் ஆக்க விரும்பினோம் என டிடிவி தரப்பு கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close