Advertisment

திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கு எத்தனை சீட்? கே பாலகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

கே.பாலகிருஷ்ணன்: இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜக, அதிமுகவை வீழ்த்துவதற்கு நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எதிர் காலத்தில் சூழ்நிலை மாறுகிறபோது அப்போது என்ன யுக்தி தேவையோ அதை செயல்படுத்துவோம்.

author-image
Balaji E
New Update
k balakrishnan, cpm state secretary k balakrishnan interview, k balakrishnan interview, கே பாலகிருஷ்ணன் சிறப்பு பேட்டி, பாலகிருஷ்ணன் நேர்காணல், தமிழ்நாடு, சிபிஎம், மார்க்சிஸ்ட் கட்சி, பாலகிருஷ்ணன், balakrishnan, cpm how many seats asks from dmk alliance, communist party of india marxist, tamil nadu politics

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான கட்சி கூட்டங்களில் பிஸியாக இருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொலைபேசியில் நேர்காணல் அளித்தார்.

Advertisment

கேள்வி: தமிழகத்தில் அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலுக்கு எவ்வாறு தயாராகி வருகிறது?

கே.பாலகிருஷ்ணன்: சி.பி.எம் பொறுத்தவரை நாங்களும் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். சமீபத்தில் எங்கள் கட்சியின் மாநில கமிட்டி கூட்டம் நடந்தது. இப்போது வாக்காளர் பட்டியல் வெளியிட்டு இருக்கிறார்கள். அதை சரிபார்ப்பது, பின்னர் வாக்குச்சாவடி அளவில் முகவர்களை தயார் செய்து வாக்குச்சாவடி முகவர்களை அமைப்பது. புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது போன்ற பணிகளை நாங்கள் மாநிலம் முழுவதும் செய்து வருகிறோம். அதே மாதிரி நாங்கள் வலிமையாக உறுதியாக இருக்கிற தொகுதிகள் எது என்று பார்த்து அந்த இடங்களில் எல்லாம் எங்களுடைய தினசரி நடவடிக்கைகளை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இனிமேல்தான் அந்தந்த மாவட்டங்களில் அந்த பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்தத் தேர்தலை பொறுத்தவரை, நாங்கள் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் பாஜக அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் திமுக கட்சியோடு தேர்தல் உறவுகொண்டு தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு எங்களுடைய மத்திய கமிட்டி ஒப்புதல் கொடுத்திருக்கிறார்கள். அதை நாங்கள் திமுக தலைமையிடம் சொல்லியிருக்கிறோம். அந்த அடிப்படையில் தேர்தல் பணிகள் என்பது இப்போது படிப்படியாக முழு வீச்சில் இறங்கி செயல்பட வேண்டும் என்று எங்களுடைய மாவட்ட, நகர, ஒன்றிய கமிட்டிகள் எல்லாவற்றுக்கும் அறிவுறுத்தியிருக்கிறோம்.

கேள்வி: பாஜக, அதிமுக கட்சிகளை வீழ்த்த திமுக கூட்டணியில் செயல்படுவதுதான் தற்போது கட்சியின் நிலைப்பாடாக இருக்கிறதா?

கே.பாலகிருஷ்ணன்: பாஜக, அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டால்தான் அவர்களை முறியடிக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் அது நடந்தது. அதே மாதிரி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், பாஜக தமிழகத்தில் காலூன்றவிடாமல் அவர்களுடைய பலத்தை முறியடிப்பதற்கும் திமுக மற்றும் அதனுடைய மற்ற கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பணியாற்றுவது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

கேள்வி: பாஜக தமிழகத்தில் வேல் யாத்திரை மூலம் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள். அந்த மாதிரி சிபிஎம் மக்களை அணி திரட்டுவது என்று ஏதாவது திட்டமிட்டுள்ளதா?

கே.பாலகிருஷ்ணன்: வேல் யாத்திரையால் இந்து ஓட்டுகளை ஒருங்கிணைத்து பலப்படுத்த முடியாது. முருக வழிபாடு என்பதும் இறைவழிபாடு என்பதும் தமிழகத்தில் காலம் காலமாக இருப்பதுதான். இன்றைக்கு ஒன்றும் புதிதாக வந்துவிடவில்லை. தமிழ்க் கடவுள் என்று எல்லோரும் முருகனைத்தான் சொல்வார்கள். அதனால், இவர்கள் ரத யாத்திரை, வேல் யாத்திரை மூலம் புதிதாக முருக பக்தியை வளர்த்துவிடப் போகிறார்களா என்ன? இன்றைக்கு அவர்களுக்கு எந்த பிரச்னையைப் பற்றியும் பேசுவதற்கு தகுதி இல்லை. அவர்களால் விலைவாசியைப் பற்றி பேச முடியாது. வேலையில்லாதது பற்றி பேச முடியாது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் பற்றி பேச முடியாது. விவசாயிகள் பிரச்னையைப் பற்றி பேச முடியாது. தொழில் வளர்ச்சி, பொருளாதாரம் பற்றி பேச முடியாது. எல்லாவற்றிலும் அவர்கள் படுதோல்வி அடைந்துவிட்டார்கள். இதையெல்லாம் பேச முடியாததால் அவர்கள் வேல் யாத்திரை, ரத யாத்திரை என்று சொல்கிறார்கள். இதை அவர்கள் அரசியலுக்காகத்தான் செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். வேல் யாத்திரை என்பது முருக பக்திக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. நான் கேட்கிறேன் எல்.முருகன் எத்தனை முறை பழனிக்கு போய் இருக்கிறார். அதனால், இவர்கள் செய்வது எல்லாம் தமிழகத்திற்கு என்ன புதுசா? அவர்களுடைய நோக்கம் என்னவென்றால் மக்களுக்கு சம்பந்தமில்லாத எதையாவது ஒன்றை உருவாக்கி அவர்களுடைய கவனத்தை திசை திருப்ப வேண்டும். அதற்காக வேல் யாத்திரை நடத்துகிறார்கள். ஏற்கெனவே, அவர்கள் விநாயகர் சதூர்த்தி என்று ஆரம்பித்தார்கள். இப்போது வேல் யாத்திரை என்று ஆரம்பிக்கிறார்கள். இது முடிந்த உடன் இன்னொன்று ஏதாவது ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு மக்களுடைய கவனம் உண்மையான பிரச்னைகள் மீது செல்லக்கூடாது என்பதுதான் திட்டம். ஏனென்றால், அதில் எதிலுமே அவர்களால் பதில் சொல்ல முடியாது.

அதிமுக - பாஜக உறவு நீடிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதிமுக அரசு கேட்டதை இவர்கள் கொடுக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து பணம் கேட்டார்கள் கொடுக்க வில்லை. ஜி.எஸ்.டி நிதி கேட்டார்கள் கொடுக்கவில்லை. பிரதமர் நிதியில் இருந்து கேட்டார்கள் தரவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருந்து உள்ளிட்டவற்றை வாங்க ரூ.3,000 கோடி கேட்டார்கள் கொடுக்கவில்லை. கொரோனாவைப் பற்றி பேசினால் இதையெல்லாம் ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி வரும். அதனால், இவர்கள் வேண்டுமென்றே இந்த மக்களுக்கு சம்பந்தமிருக்கிற எந்த பிரச்னையைப் பற்றியும் பேசுவதில்லை. அவர்கள் மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்கு வேல் யாத்திரையை ஆரம்பிக்கிறார்கள்.

சிபிஎம் கட்சியை பொறுத்தவரை மக்களுடைய அடிப்படையான பிரச்னைகளை பேசி வருகிறோம். நவம்பர் 26ம் தேதி அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். அதற்கு தமிழ்நாட்டில் வேலைகளை செய்துகொண்டிருக்கிறோம். 100 நாள் வேலையை நகரங்களிலும் அமலாக்க தமிழ்நாடு முழுவதும் வேலை செய்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால், 100 நாள் வேலை என்பது கிராமப்புறத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டும்தான். 100 நாள் வேலை திட்டத்தை நகராட்சியிலோ, மாநகராட்சியிலோ அமல்படுத்த முடியாது. இன்னும் சொல்லப்போனால், நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை உருவாக்குங்கள் என்று அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம். அதாவது, நாங்கள் தொடர்ந்து இயக்கங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள்தான் தமிழ்நாட்டில் தலைமை தாங்கி போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதே மாதிரி விவசாயிகளை பாதிக்கக்கூடிய பிரச்னைகளான அது டெல்டா பிரச்னையாக இருக்கலாம், மின் கோபுர பிரச்னையாக இருக்கலாம், எரிவாயு குழாய் புதைக்கிற திட்டமாக இருக்கலாம், எட்டு வழிச் சாலையாக இருக்கலாம், இந்த மாதிரி மக்களை பாதிக்கக்கூடிய எல்லா பிரச்னைகளுக்கும் எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம். அதே போல, அதிமுக அரசாங்கத்தின் ஊழலை எதிர்த்து கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறதோ அதற்கு எல்லாம் இன்றைக்கு சிபிஎம்-தான் போராடிக்கொண்டிருக்கிறது.

கேள்வி: பீகார் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல், ஒன்றிணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்தார்கள். ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் இது ஒரு வலுவான கூட்டணி. எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி பீகாரில், தமிழகத்தில் அமைந்தது போல தேசிய அளவில் சாத்தியப்படாமல் போனதற்கு காரணம் என்ன?

கே.பாலகிருஷ்ணன்: தமிழ்நாட்டில்தான் முதன்முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் அப்படியான ஒரு அணி உருவானது. தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களில் 39 இடங்களில் இந்த அணி வெற்றி பெறுகிற நிலை ஏற்பட்டது. அதே மாதிரி, வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பாலான இடங்களில் இந்த அணிதான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதிரி வட மாநிலங்களில் ஒரு ஒன்றிணைவு வராதது பாஜகவுக்கு சாதமாக இருக்கிறது. பீகார் தேர்தலில் பார்த்தீர்கள் என்றால் சரிக்குசமமாக வந்துகொண்டிருந்தபோது, கடைசி நேரத்தில் அவர்கள் 10 -12 இடங்களில் தப்பாக அறிவித்துதான் அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். 12 ஓட்டில் ஒருவர் வெற்றி பெறுகிறார். மறு வாக்கு எண்ணிக்கை நடத்துங்கள் என்றால் அவர்கள் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரி 100 ஓட்டு, 500 ஓட்டுகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் மாற்றி வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். வேண்டுமானால், நீங்கள் கோர்ட்டுக்கு போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அதனால், பீகார் தேர்தலில் உண்மையிலேயே பாஜக பெற்றதா என்றால் இல்லை. அது அறிவிக்கப்பட்ட வெற்றி அவ்வளவுதான். உண்மையான வெற்றி என்றால், ஆர்.ஜே.டி., காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ எம்எல் எல்லாம் சேர்ந்திருக்கிற அணிக்குதான் உண்மையான வெற்றி. வாக்கு சதவீதம் என்று பார்த்தாலும் இவர்கள்தான் அதிகம்.

இந்த கூட்டணி தேசிய அளவில் ஏன் சாத்தியமாகவில்லை என்றால், தேசிய அளவில் முன் முயற்சி எடுக்க வேண்டியது காங்கிரஸ். அதே நேரத்தில், இந்த மாதிரி ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய தன்மை மற்ற மாநில கட்சி தலைவர்களிடம் வரவில்லையா என்று தெரியவில்லை. நிச்சயமாக அதை நோக்கிதான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும். அது அனுபவத்தில் இருந்துதான் வரும். ஏனென்றால், இவ்வளவு நாளுக்குப் பிறகு இப்போதுதானே பீகாரில் வந்துள்ளது. அதனால், மேற்கு வங்கத்தில் சிபிஎம், காங்கிரஸ் எல்லாம் ஒன்றாக சேர்ந்து போராடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். அது மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கிற மாநில கட்சிகளில் இருக்கிற பரஸ்பரம் மற்றும் போட்டிகளைத் தவிர்த்து அந்த மாதிரி ஒருங்கிணைப்பை உருவாக்கினால் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் தொடர்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்தீர்கள். வெற்றி பெறவில்லை என்றாலும் மாற்று அரசியலை எதிர்பார்த்தவர்கள் வரவேற்றார்கள். அதன் பிறகு திமுக கூட்டணியில் இணைந்து தொடர்கிறீர்கள். உங்களுக்கு திமுக கூட்டணியை தவிர்த்து வேறு மாற்று யுக்தி ஏதாவது இருக்கிறதா?

கே.பாலகிருஷ்ணன்: ஒவ்வொரு தேர்தலும் ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் நடக்கிறது. கடந்த தேர்தல் நடந்த சூழல் என்பது வேறு, இந்த தேர்தல் நடக்கும் சூழல் என்பது வேறு. கடந்த தேர்தலில் பாஜக தனியாக போட்டியிட்டது. அதிமுக தனியாக போட்டியிட்டது. திமுக தனியாக போட்டியிட்டது. அபோதிருந்த சூழ்நிலை வேறு. இப்போது எங்களுக்கு அகில இந்திய அளவில், பாஜக அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு 100 மடங்கு ஆபத்தான கட்சியாக மாறிப்போய்விட்டது. இன்னும் கொஞ்சநாளில் உச்ச நீதிமன்றம், ஊடகம் எல்லாம் அவர்கள் ஆட்டுவிக்கும் நிலைக்கு சென்றுவிடும். இப்போதே அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் என எல்லாவற்றையும் அவர்கள் சொல்வது போல் ஆடுகிற ஒரு பொம்மையைப் போல மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். அரசியல் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜகவுக்கு எதிராக அனைவரையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்பதுதான் இந்த தேர்தலில் நாங்கள் வைத்திருக்கிற ஒரு மையமான குறிக்கோள். பாஜகவுடன் அதிமுக சேருகிறபோது அவர்களை வீழ்த்துவதுதான் இந்த தேர்தலில் எங்களுடைய பிரதானமான பணியாக நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி: அப்போது இந்த தேர்தலுக்குப் பிறகு சிபிஎம் கட்சியின் யுக்தி மாறுமா?

கே.பாலகிருஷ்ணன்: நிச்சயமாக மாறலாம். எதிர்காலத்தில் அன்றைக்கு இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்ப மாறலாம். அப்படியே தொடர்ந்து காலம் காலத்துக்கு இதுதான் இருக்கும் என்று நான் சொல்ல விரும்பவில்லை. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜக, அதிமுகவை வீழ்த்துவதற்கு நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். எதிர் காலத்தில் சூழ்நிலை மாறுகிறபோது அப்போது என்ன யுக்தி தேவையோ அதை செயல்படுத்துவோம். இதே சூழ்நிலை நீடிக்கும் என்று சொல்ல முடியாது. சூழ்நிலை மாறுகிறபோது நம்முடைய யுக்திகள் கூட மாறலாம்.

கேள்வி: திமுக கூட்டணியில் அதிகமான கூட்டணி கட்சிகள் இருக்கிறது. திமுக அதிக எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் அதற்கு ஏற்றாற்போல கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை குறைவாக ஒதுக்க வேண்டும் என்ற அக்கட்சியில் பேசி வருவது தெரிகிறது. அதனால், சிபிஎம் இதற்கு முன்பு திமுக கூட்டணியில் போட்டியிட்ட அதே எண்ணிக்கையில் இடங்களைக் கேட்குமா இல்லை கூடுதலாக கேட்குமா?

கே.பாலகிருஷ்ணன்: ஒவ்வொரு கட்சியும் அவர்கள் அப்படி சொல்லத்தான் விரும்புவார்கள். அதிமுகவும் அப்படிதான் இருப்பார்கள். திமுகவும் அவர்களுக்கு தேவையான இடத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுகு கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேர்தலில் நாங்கள், அந்த காலத்தில் போட்டியிட்ட விவரங்கள் இன்றைக்கு இருக்கிற எங்களுடைய புதிய வாய்ப்புகள். எல்லாவற்றையும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு எங்களுடைய பலத்துக்கு ஏற்ப இடங்களைப் பெற திமுகவிடம் நாங்கள் வற்புறுத்துவோம். கடைசியாக கூட்டணி தலைவர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கேட்கிற எல்லா சீட்டையும் அவர்கள் கொடுத்துவிடமாட்டார்கள். அவர்கள் இடங்களை குறைத்துதான் கொடுப்பார்கள் என்றால் அதை ஒத்துக்கொள்வதில் எங்களுக்கும் கஷ்டம் இருக்கும். அப்போது ஏற்படக் கூடிய உடன்பாட்டில் என்ன முடிவுக்கு வருவது என்று இறுதியாகத்தான் தெரியும்.

கேள்வி: இப்போது பாஜக, வேல் யாத்திரை, மற்ற கட்சிகளில் இருப்பவர்களை பாஜகவில் சேர்ப்பது, சினிமா பிரபலங்களை கட்சியில் சேர்ப்பது, பிறகு, எதிர்க்கட்சிகளை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பிரசாரம் செய்வது என்று இருக்கிறார்கள். இதனை திமுக கூட்டணி கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?

கே.பாலகிருஷ்ணன்: திமுக கூட்டணி இதற்கு புதிய யுக்தியை கையாள வேண்டும் என்ற அவசியமில்லை. மத்திய அரசாங்கம், ஊடகங்கள் பாஜக கையில் இருக்கிறது. ஊடகங்களை மிரட்டுகிறார்கள். ஊடகங்களை நெருக்கி பாஜகதான் தமிழகத்தை ஆளுகிற கட்சிபோல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால், உண்மையிலேயே தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் போய் பார்த்தால்தான் தெரியும். பாஜக வெற்றி பெறுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது. இவர்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்குப் பிறகு, அவர்களுக்கு செல்வாக்கு கூடிவிட்டது என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. அடுத்து தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்து, முஸ்லிம் என்று மத அடிப்படையில் அரசியல் செய்வதை மக்கள் விரும்புவதில்லை. தமிழகத்தில் 99 சதவீத மக்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறது. அதனால், அவர்கள் மத அடிப்படையில் ஓட்டு போட்டதாக எந்த காலத்திலும் நடந்ததில்லை. அவர்களுக்கு இறை நம்பிக்கையும் இருக்கும். அரசியல் ரீதியாக வேறு கட்சியில் இருப்பார்கள். அதனால், எல்லோரும் ஏதோ ஒரு கட்சியில் இருப்பார்கள். அதனால், அதையெல்லாம் விட்டுவிட்டு மத அடிப்படையில் இந்து என்று எல்லாம் ஒன்றாக சேர்து வாருங்கள் என்றால் தமிழ்நாட்டில் நடக்காது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டு மக்களும் மதத்தையும் அரசியலையும் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இது வேறு, அது வேறு என்று தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

கேள்வி: சிபிஎம் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருக்கிறது என்று ஏதாவது கூற முடியுமா?

கே.பாலகிருஷ்ணன்: இன்னும் பேச்சுவார்த்தை எல்லாம் இருக்கிறது. அதற்குள் நாம் அதை பகிரங்கமாக பேசுவதற்கு இல்லை. இரண்டு கட்சிகளும் சேர்ந்து பேசுகிறபோது என்ன என்று பார்ப்போம். பத்திரிகைகளுக்கு சொல்லாமல் முடிக்கப் போவதில்லை.

கேள்வி: நவம்பர் 26ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டத்தை சிபிஎம் எப்படி திட்டமிட்டிருக்கிறது?

கே.பாலகிருஷ்ணன்: நவம்பர் 26ம் தேதி தொழிற்சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள் எல்லாம் இணைந்து நாடு தழுவிய அளவில் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளார்கள். டெல்லியில் 27ம் தேதி லட்சக் கணக்கான விவசாயிகள் திரண்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போகிறார்கள். அதனால், அன்றைக்கு டெல்லிக்கு உள்ளே யாரும் வரக்கூடாது என்கிற நிலைமை வந்தாலும் வரும் போல் இருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் ரயில் மறியல், சாலை மறியல் நடைபெறும். தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மோசமான நடவடிக்கையால் மக்களின் கோபம் உச்சத்தில் இருக்கிறது. அந்த கோபத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த மறியல் போராட்டத்தில் பல லட்சக் கணக்கான விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பார்கள்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Dmk K Balakrishnan Cpm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment