காலா கலெக்‌ஷன்: ரஜினிகாந்த் அரசியலால் குறைகிறதா?

காலாவின் முதல் நாள் கலெக்‌ஷன் 12.3 கோடி ரூபாய்! எந்திரன் (11 கோடி) வசூலைவிட இது அதிகம்!

ச.செல்வராஜ்

காலா கலெக்‌ஷன் குறைந்துவிட்டதாகவும், இதனால் ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இவற்றில் உண்மை எந்த அளவுக்கு இருக்கிறது?

காலா, ரஜினிகாந்த்-ன் இதர படங்களில் இருந்து மாறுபட்ட சூழலில் வந்திருக்கிறது. படத்தில் போராளியாக வரும் ரஜினிகாந்த், காலா ரிலீஸுக்கு சில நாட்கள் முன்னதாக ‘எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும்’ என ஆவேசப்பட்டார்.

இதனால் ரியல் காலா வேறு, ரீல் காலா வேறு என விமர்சனங்கள் எழுந்தன. காலாவை வசூல் ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்கிற பிரசாரமும் ஒருபக்கம் நடந்தது. அரசியலுக்குள் ரஜினி அடியெடுத்து வைக்கும் வேளையில் காலா வசூலில் விழ்ந்தால், அது ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியின் வேகத்தையும் குறைக்கக் கூடும்.

காலா, இந்த வகையில்தான் ரஜினிகாந்திற்கும் அவரது எதிர்ப்பாளர்களுக்குமே மிக முக்கியமான படம்! ஜூன் 7-ம் தேதி படம் ரிலீஸ் ஆனது முதல் பல ஊர்களில் காலா ஓடுகிற தியேட்டர்களில் டிக்கெட் முழுமையாக விற்காமல் காலியாகக் கிடப்பதாக ரஜினி எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். நிஜமாகவே காலா கலெக்‌ஷன் சொதப்பல்தானா?

காலா கலெக்‌ஷன் தொடர்பாக திரைத்துறை வட்டாரங்கள் தரும் தகவல்கள் இங்கே:

அமெரிக்காவில் காலா கலெக்‌ஷன் 1 மில்லியன் டாலரை தாண்டியிருக்கிறது. அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் இலக்கை எட்டியவை எந்திரன், லிங்கா, கபாலி, காலா ஆகிய நான்கே படங்கள்தான்! நான்குமே ரஜினிகாந்த் படங்கள்! உலகளாவிய அளவில் காலாவின் முதல் நாள் கலெக்‌ஷன் 31.3 கோடி என்கிறது கோலிவுட் வட்டாரம்!

தமிழ்நாட்டில் காலாவின் முதல் நாள் கலெக்‌ஷன் 12.3 கோடி ரூபாய்! எந்திரன் (11 கோடி) வசூலைவிட இது அதிகம்! லிங்கா (12.3 கோடி) வசூலுக்கு இணையானது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் நாள் கலெக்‌ஷனில் ‘டாப்’பில் இருப்பது நடிகர் விஜய்-யின் மெர்சல்தான்! அதன் வசூலை(27.78 கோடி) வேறு படங்கள் எட்டிப் பிடிக்கவில்லை. கபாலி (19.1 கோடி), பைரவா (16.61), விவேகம் (16.05), வேதாளம் (15.30), தெறி (14.4), கத்தி (12.55) ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. இந்தப் பட்டியல் அடிப்படையில் பார்த்தால் காலா வசூல் பிரமாதம் இல்லை. அதே சமயம் தோல்வியும் இல்லை.

ரஜினிகாந்த் படத்திற்கு முதல் சில நாட்கள் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தே குடும்பமாக வருகிறவர்கள் தவிர்ப்பது உண்டு. தவிர, சரியாக பள்ளிக்கூடங்கள் திறந்து சில நாட்களில் படம் ரிலீஸ் ஆகியிருப்பதும் குழந்தை குட்டிகளுடன் வருகிறவர்களை படம் பார்க்கும் திட்டத்தை தள்ளிப் போட வைத்திருக்கலாம்!

ஆனாலும் கபாலி படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை காலா எட்டிப் பிடிக்காதது சறுக்கல்தான்! அரசியலில் களம் இறங்கும் ரஜினியை மற்றக் கட்சிகளின் தொண்டர்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்ட அறிகுறி இது என்கிற குரல்களும் எழுகின்றன. அடுத்தடுத்த நாட்களில் கலெக்‌ஷன் ரிசல்ட்டைப் பொறுத்தே இதில் ஒரு தெளிவு கிடைக்கும்.

 

×Close
×Close