Advertisment

சின்ன சேலத்தில் 144 தடை உத்தரவு: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தலைவர்கள் கோரிக்கை

சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Kallakurichi

Tamil news

சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பிரேத பரிசோதனை அறிக்கை அளித்தும், அறிக்கை ஏற்கத்தக்க வகையில் இல்லை எனக் கூறி உடலை வாங்க மறுத்தும் உறவினர்கள் நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவி குதித்து மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததற்கான அடையாளம் இல்லை. மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்களும் உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர்.

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி, மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின், பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (ஜூலை 16) வெளியான நிலையில், அந்த அறிக்கை போலியானது என்று கூறி மாணவியின் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இருப்பினும், மாணவியின் பெற்றோர், மகளின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே, உயிரிழந்த மாணவியின் இல்லத்துக்கு நேற்று (ஜூலை 16) சென்ற அமைச்சர் சி.வி.கணேசன், பெற்றோருக்கு ஆறுதல் கூறி, முறையான விசாரணை நடத்தி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனிடையே, சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு, நீதி கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், கல்வீச்சு, பேருந்துகளுக்கு தீவைப்பு என கலவரமாக மாறியதால் போலீசார் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை விரட்டி அடித்து வருகின்றனர். மேலும், உறவினர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளியில் மாணவி உயிரிழந்தது தொடர்பாக, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: மாணவி ஸ்ரீமதி சந்தேகத்துக்கிடமாக இறந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். இச்சம்பவம் குறித்து காவல்துறை அனைவரது சந்தேகங்களையும் போக்கும் வகையில் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கை உரிய விசாரணை நடத்தாமல் மெத்தனமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அந்த மாணவியைப் போல ஏற்கெனவே 5-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவி ஸ்ரீமதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மாணவி ஸ்ரீமதி, 12-ம் தேதி இரவு இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மறுநாள் காலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவே தாய்க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிபிசிஐடி விசாரணை தேவை.

மக்கள் நீதி மய்யம்: மாணவி படித்த பள்ளியில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றை மூடி மறைத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் நெருக்கடி, மன அழுத்தத்தை ஆராய்ந்து, உரிய தீர்வுகாண தமிழக அரசு தனிக் குழுவை அமைக்க வேண்டும்.

சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மச்சாவு தொடர்பாக நடவடிக்கைக் கோரி நடைபெற்ற சாலைமறியல் பேருந்துக்கு தீ வைப்பு, போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்குவது என கலவரமாக மாறியது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியிருப்பதும், காவல்துறை சரக துணைத் தலைவர் காயமடைந்திருப்பதும் கவலையளிக்கிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நிலைமையை இந்த அளவுக்கு மோசமாக்கிய காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற 12ஆம் வகுப்பு மாணவி சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்தார். சரியாக படிக்க முடியாததால் ஏற்பட்ட கவலையில் அந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், வெளியில் சொல்ல முடியாத வேறு காரணங்களால் மாணவி மர்மமான முறையில் இறந்து விட்டதாக பெற்றோரும் கூறி வந்தனர்.

மாணவியின் மர்மச்சாவுக்கு நீதி கேட்டு பெற்றோர்கள் கடந்த 5 நாட்களாக அமைதியாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று காலையில் போராட்டம் பெரும் கலவரமாக மாறியிருக்கிறது.

போராட்டத்தின்போது காவல்துறை வாகனத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியிருக்கின்றனர்; காவல்துறையினர் மீது சரமாரியாக கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வீச்சில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பாண்டியன் காயமடைந்திருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட காவலர்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை மற்றும் பள்ளி வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கலவரக்காரர்கள் அங்குள்ள பொருட்களை சூறையாடியுள்ளனர். காவல்துறையினர் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கூட கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படுமோ? என்ற அச்சம் எழுகிறது.

சின்னசேலத்தில் நிகழும் அனைத்து கலவரங்களுக்கும் காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் ஆகும். மாணவி மர்மச்சாவு அடைந்த நிலையில், அதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தவறு இல்லை என்று தெரிய வந்திருந்தால் உண்மையை பெற்றோரிடம் விளக்கி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், இதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

சின்ன சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் நெருங்கிய உறவினர்களோ இல்லை. வெளியூரிலிருந்து திட்டமிட்டு வந்தவர்கள் தான் கலவரத்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த உண்மையை காவல்துறையும் ஒப்புக் கொண்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளியூரிலிருந்து வந்து திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய நிலையில், அதை உளவுத்துறை மூலம் முன்கூட்டியே அறிந்து காவல்துறை தடுத்திருக்க வேண்டும்.

ஆனால், காவல்துறை வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்படும் வரை கலவரத்தின் தீவிரம் காவல்துறையினருக்கு தெரியவில்லை. காவல்துறை வாகனங்கள் தீயிடப்படும் காட்சிகளையும், பள்ளி வளாகம் சூறையாடப்படும் காட்சிகளையும் ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பிய நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு அந்தப் பகுதியில் காவலர்களே இல்லை. அந்த அளவுக்கு அங்கு காவலர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. நிலைமையை கணிக்க உளவுத்துறை தவறியது தான் சின்ன சேலம் கலவரத்திற்கு முதன்மையான காரணமாகும்.

சின்ன சேலம் கலவரத்தின் பின்னணியில் மாணவியின் மர்மச்சாவு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும்கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் காவல்துறையினர் இனியும் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பின்னணியில் இருந்து கலவரத்தை தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவியின் மர்மச்சாவு குறித்தும் விரிவான விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்களை தண்டிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Edappadi K Palaniswami Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment