Advertisment

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளிக்குள் புகுந்த மக்கள்; பஸ்களுக்கு தீவைப்பு; துப்பாக்கிச் சூடு

சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், நீதி கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்வீச்சு, தீ வைப்பில் ஈடுபட்டதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Kallakurichi

Tamil news Updates

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், நீதி கேட்டு உறவினர்கள், பொதுமக்கள், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்குள் புகுந்த மக்கள் கற்களை வீசி பஸ்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அந்த பகுதி கலவரமயமானது ஏற்பட்டது.

Advertisment

கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியின் 2-வது மாடியிலிருந்து இருந்து விழுந்து மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால், உடலில் காயங்கள் இருந்ததாகவும் பெற்றோர்கள் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு தொடர்பாக 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆண் ஆசிரியரிடம் சின்னசேலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனிடையே, மாணவி உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே மாணவியின் உடலை வாங்குவோம் என பெற்றோர் தெரிவித்து ஜூலை 14 சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, மறியலைக் கைவிட்டனர்.

இருப்பினும், மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு நிறைவடைந்த நிலையில், மாணவியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், மாணவர் அமைப்பினர் இன்று (ஜூலை 17) நான்காவது நாளாக அந்த தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பள்ளியின் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது, சிலர் போலீசாரின் தடுப்புகளைத் தள்ளிவிட்டு போலீசார் தடுத்ததையும் மீறி பள்ளிக்கு உள்ளே சென்றனர். சிலர் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். அதுமட்டுமல்லாமல், பள்ளிக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளியின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறிய நிலையில், போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் சிலர் காயம் அடைந்ததனர். இதனால், போலீசார் கூட்டத்தைக் கலைக்க தடியடி நடத்தினர். மேலும், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால், அந்த பகுதியே கலவரமயமானது. இதையடுத்து அவர்கள் தடியடி நடத்தினர்.

தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக, நீதி கேட்டு உறவினர்கள், பொதுமக்கள், மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவத்தால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து, பலரும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, போராட்டக்காரர்களைக் கலைக்க அதிரடிப்படையினர் வரழைக்கப்பட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள், அதிரடிப்படையினரை வரும் வழியிலேயே மறித்து தடுத்து கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், போராட்டக்காரர்கள் மீது அதிரடிப்படை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால், அந்த பகுதியே கலவரமயமாகி உள்ளது.

இதையடுத்து, கனியாமூர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அதில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment