Advertisment

அரசியலில் ஈடுபட கமல்ஹாசன் முடிவெடுத்தது எப்போது தெரியுமா?

அரசியலில் ஈடுபட எப்போது முடிவெடுத்தேன் என்பதை, தான் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
kamal haasan new party

அரசியலில் ஈடுபட எப்போது முடிவெடுத்தேன் என்பதை, தான் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Advertisment

மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் நேற்று தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். மதுரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சிக்கொடியை ஏற்றி, கட்சியின் பெயரையும் அவர் அறிவித்தார். ‘மய்யம்’ என்பது ஏற்கெனவே அவர் நடத்திவந்த பத்திரிகையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களை கமல்ஹாசன் விமர்சனம் செய்ய, அவர்களும் பதிலுக்கு அவரைத் தாக்க... அதனாலேயே கட்சி ஆரம்பிக்கிறார் கமல்ஹாசன் என்றுதான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ஆனால், ‘ஆனந்த விகடன்’ இதழில் தான் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில், அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு எப்போது வந்தது என்பது குறித்து எழுதியிருக்கிறார்.

‘அப்போது, சென்னைப் புறநகர், பூந்தமல்லியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்தத் தளத்துக்கு அருகிலேயே தன் ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தார். “சந்திக்கலாமா, அதுவும் ரகசியமாக’’ என்று கேட்டேன். “எங்கு வரலாம்?’’ என்று பேசிவிட்டு, தனியாக காருக்குள் அமர்ந்து பேசினோம். நான் எடுத்த முடிவு, மற்றவர்களுக்குத் தெரியும்முன் அவருக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே அந்தச் சந்திப்பு. “அப்படியா, எப்ப முடிவெடுத்தீங்க?’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டார். “மனதளவில் முடிவெடுத்து ரொம்பநாள் ஆச்சு. ஆனால், காலெடுத்து வைப்பது இப்போதுதான்’’ என்றேன்.

‘எந்தக் காரணம் கொண்டும் கண்ணியம் குறையக்கூடாது’ என்பதுதான் அன்று நாங்கள் பேசிக்கொண்டதில் முக்கியமான விஷயம். ஆம், “ஒருவேளை எதிரும்புதிருமாக நின்றாலும் மரியாதை குறைந்துவிடக்கூடாது. அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும்’’ என்றேன். “அஃப்கோர்ஸ் கமல்’’ என்றார் அவர். முடிவெடுத்திருப்பதைச் சொல்ல அன்று சந்தித்தேன் என்றால், “கட்சி கட்டப் புறப்படுகிறேன்’’ என்று சொல்ல இப்போது சந்தித்தேன். “வரலாமா?’’ என்று கேட்டேன். “சாப்பிட்டிட்டிருக்கேன். முடிச்சிடுறேன் வாங்க’’ என்றார். ஆனால், நான் போகும்போது சாப்பிட்டுக்கொண்டுதானிருந்தார். ஆம், அவ்வளவு சீக்கிரம் போய்விட்டேன். அதே புரிதலோடுதான் இருக்கிறோம், பேசுகிறோம் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

“ஆமாம்... நீங்ககூட உங்க ரசிகர்கள்கிட்ட, ‘ரஜினியைப் பற்றி ஒரு வார்த்தை தப்பா பேசினீங்கனா எனக்குப் பொல்லாத கோபம் வரும்’ என்று சொன்னீர்கள் என்று கேள்விப்பட்டேன்’’ என்றார். “ஆமாம், வசவு அரசியல் நமக்குத் தேவையில்லை. நீங்களும் அப்படித்தான் இருக்கணும் என்று நான் சொல்லவே மாட்டேன். ஏன்னா, நீங்க கண்டிப்பா அப்படித்தான் இருக்கீங்கனு தெரியும். இல்லாத அரசியல் மாண்பை நாம் இருக்கச்செய்ய வேண்டும். நாமளாவது அதைச் செய்வோம்’’ என்றேன். ஆமாம், நாங்கள் நினைத்திருந்தால் வாடாபோடா நண்பர்களாகவே இருந்திருப்போம். ‘நாங்கள் அப்படி இல்லை’ என்று  25 வயது இளைஞர்களாக இருக்கும்போதே முடிவு செய்துவிட்டோம்.

அரசியலைப் பற்றி பேச்சு திரும்பியது. “எவ்வளவு பெரிய ஆட்கள் இருந்த இடம்’’ என்றார். “நாமெல்லாம் ரொம்பச் சின்னவங்க என்று நீங்கள் நினைத்தால்கூட மக்கள் அதையெல்லாம் விரும்புகிறார்கள். அதற்குக் காரணம், யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம். அதற்குப் பெயர் வெற்றிடம் இல்லை. தாளாத பசியும் தாக்கமும். நமக்கும் கடமை இருக்கிறது. நான் ஆரம்பிச்சிடுறேன்’’ என்றேன். வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்’ என்று அந்தத் தொடரில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

Makkal Needhi Maiam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment