“ரஜினிகாந்த் அளவுக்கு கமல்ஹாசனால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது” : அரசியல் விமர்சகர் கருத்து

‘ரஜினிகாந்த் அளவுக்கு கமல்ஹாசனால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ என அரசியல் விமர்சகரான பி.ராமஜெயம் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அளவுக்கு கமல்ஹாசனால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது’ என அரசியல் விமர்சகரான பி.ராமஜெயம் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் எனப் பல வருடங்களாக அவர் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் 31ஆம் தேதி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் கட்சிக்கான ஆள் சேர்ப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அது முடிந்ததும் கட்சியின் பெயரை அறிவிக்கும் ரஜினிகாந்த், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இன்னொரு புறம், ட்விட்டரில் கருத்துகளைத் தெரிவித்துவந்த கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியுள்ளார். ஆனால், கட்சி, ஆள் சேர்ப்பு இதைப் பற்றியெல்லாம் இன்னும் வாய் திறக்காத கமல், வருகிற 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில், மக்களின் பிரச்னைகள் என்னென்ன என்பதைப் பற்றி அவர் தெரிந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள அரசியல் விமர்சகரான பி.ராமஜெயம், ‘தமிழக அரசியலில் கமலின் வருகை சில விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், ரஜினி அளவுக்கு முடியாது. ரஜினி எது செய்தாலும் அது மாஸாக இருக்கும். ஆனால், மிடில் கிளாஸ் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கமல்ஹாசன் நம்பிக் கொண்டிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘ரஜினியை போல இல்லாமல், பாஜகவுக்கு எதிரானவராகத் தன்னை வெளிப்படையாக காட்டிக் கொள்கிறார் கமல்ஹாசன். வகுப்பு வாதம் மற்றும் அடிப்படை வாதத்திற்கு எதிராக நிற்கிறார் கமல்ஹாசன் என்பதை, அவரைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர்களைக் கொண்டே நாம் அறிந்து கொள்ளலாம்’ எனவு அவர் தெரிவித்துள்ளார்.

‘கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருக்குமே வயது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, மறைந்த ஜெயலலிதா இருவருமே இவர்களின் வயதுக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்துவிட்டனர்’ என்றும் பி.ராமஜெயம் தெரிவித்துள்ளார்.

திரைப்பட வரலாற்று ஆய்வராளரான தியோடோர் பாஸ்கரன், ‘சினிமா புகழால் தமிழக அரசியல் சிறிய தாக்கத்தை கமல்ஹாசனால் ஏற்படுத்த முடியும். ஆனால், அதன் தரத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close