மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஆனால், அதை விவரிக்க முடியாது என்றும் கூறினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, சென்னை அண்ணாநகரிலுள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 117 மாவட்டச் செயலாளர்களில் 114 பேர் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள், செல்போன்களும் வெளியிலேயே வாங்கிவைக்கப்பட்டன. அனைவரும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தின்போது ஊடகங்கள், வெளி நபர்கள் அனுமதிக்கப்பட்டவில்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், அங்கே இருந்து புறப்பட்டுச் சென்ற மநீம தலைவர் கமல்ஹாசனிடம் ஊடகங்கள், ஆலோசனைக் கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு ஆமாம் என்று கூறினார். மேலும், கட்சியில் பூத் கமிட்டி அமைப்பதற்கு குறித்து விவாதிக்கப்பட்டதா என்றா கேள்விக்கு, அதையெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து ஏதாவது விவாதங்கள் நடந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், விவாதங்கள் நடக்கும். ஆனால், அதையெல்லாம் விவரிக்க முடியாது என்று கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “2024 தேர்தலில் நம் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம். தனியாக நிற்பதற்கு என் பலம் சரியாக இருக்க வேண்டும். யாராவது கூட்டணிக்கு அழைத்தால்கூட அங்கு பேசுவதற்கும் சரியான பலத்தை நாம் நிரூபிக்க வேண்டும். எனவே, கட்சி வளர்ச்சி முக்கியம். நான் எதற்காக வந்தேனோ அதையெல்லாம்விட்டு மாற மாட்டேன்.
இங்கு லாபம் பார்க்க வரவில்லை. என்னுடைய கொள்கையில் தெளிவாக இருப்பேன். என்னைத் தாண்டியும் இந்தக் கட்சி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். கடந்த முறை செய்த தவறுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் செய்யக் கூடாது” என்று கமல்ஹாசன் பேசினார் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ட்விட்டர் பக்கத்தில், “தலைவர்
கமல்ஹாசன் உடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்துவது, பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"