போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்வீட்

‘போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பஸ் ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலையில் திடீரென வேலை நிறுத்தத்தில் இறங்கினர். முன்னதாக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர்.

பஸ் ஊழியர்களுக்கு 2.57 மடங்கு காரணி அடிப்படையில் ஊதிய உயர்வை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அரசு தரப்பில் 2.44 மடங்கு காரணியால் பெருக்கி வழங்க சம்மதம் தெரிவித்தனர். எனவே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வெளியேறின. ஆளும்கட்சியின் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட இதர சங்கங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டன. இதைத் தொடர்ந்தே மாநிலம் முழுவதும் பெரும்பாலான பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பஸ் ஊழியர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக வெளியூர் பஸ்களில் பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். இதன் காரணமாக நேற்று (ஜனவரி 4) இரவு 7 மணிக்கு மேல் மாநிலம் முழுவதும் பஸ் பயணிகள் அடைந்த இன்னல்கள் சொல்லி மாளாது. இன்று இரண்டாவது நாளாக பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

இந்நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பிலா பரிசாகும்” என அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் பல்வேறு பிரச்னைகள் பற்றி சில மாதங்களாக கருத்து கூறிவந்த கமல், ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்காக அமெரிக்காவில் இருப்பதால் கடந்த ஒரு மாதமாக எந்தக் கருத்தையும் பதிவிடவில்லை. எனவே, ‘சினிமா வேலை வந்தால் மக்கள் பணிகளை மறந்துவிடுவீர்களா?’ என்றெல்லாம் கமல்ஹாசனை நோக்கி கேள்வி நீண்டது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்தபடியே போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ட்வீட்டியுள்ளார் கமல்ஹாசன்.

×Close
×Close