ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை: கமல்

தமிழகத்தை ஆளும் பினாமி-குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.

அன்புச் சகோதரர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என அரசை விமர்சனம் செய்திருந்தார். இதன் காரணமாக, அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹசனுக்கு கடும் கண்டனைத்தை தெரிவித்தனர். மேலும், பணத்திற்கான என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் கமல்ஹாசன் என்றும், தனக்கு மார்க்கெட் இல்லாமலேயே தொலைக்காட்சி தொடர்களில் தற்போது புகுந்துள்ளார் என்றும் வாய்க்கு வந்தபடி விமர்சித்துத் தள்ளினர். அதோடு, கமல்ஹாசன் மீது வழக்குப் போட்டுவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது: ஆட்சி செய்பவர்கள் தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து அவற்றுக்கு விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் குற்றவாளியின் பினாமி-குதிரை பேர ஆட்சியோ உண்மையை எடுத்துரைப்பவர்களை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது. கலைஞானி கமலஹாசன் அவர்கள், தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதையும், பீகாரை விட தமிழகம் லஞ்சம் ஊழலில் மோசமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்திருந்தார். மக்களின் உணர்வைத்தான் கமலஹாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காக அவரைப் பாய்ந்து பிறாண்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சட்டத்தைக் காட்டி மிரட்டிப் பார்க்கிறார்கள்.

கமல்ஹாசன் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி குறித்த விவாதங்களுக்கும், அரசாங்கம் பற்றிய அவருடைய கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. தமிழகத்தை ஆளும் பினாமி-குதிரை பேர ஆட்சியின் அவலட்சணத்தை வெளிப்படுத்தும் உரிமை கமல் உள்ளிட்ட வாக்களித்த அனைவருக்கும் உண்டு.

தமிழக அரசின் ஊழல் குறித்த கமலஹாசனின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரலாகும். அதை அடக்க முயற்சிக்கும் அமைச்சர்கள், இந்த ஆட்சி இன்னும் எத்தனை காலம் என்பதை உணர்ந்து, தங்களைத் திருத்திக்கொள்ளட்டும். என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் மு.க ஸ்டாலினுக்கு உடனே நன்றி சொல்வதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close