பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு முட்டை ஊழலை அம்பலப்படுத்தியதாக தனது நற்பணி இயக்கத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தினர் கடந்த ஜூலை 24-ம் தேதி பெரம்பலூரில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது, அங்கன்வாடி மையத்திலுள்ள 3 வயது, 4 வயது குழந்தைகளுக்கு அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை கண்டறிந்த கமல் ரசிகர் மன்றத்தினர், இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேபோல, பெரம்பலூர் ஒன்றியம், நகரம், வேப்பந்தட்டை ஒன்றியம், குன்னம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஆரம்ப பள்ளிகளிலும் கமல்ஹாசன் ரசிகர்கள் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/eggs-l-reuters-1.jpg)
இந்த ஆய்வின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அழுகிய சத்துணவு முட்டை வழங்கப்படுவதாக என்று கமல்ஹாசன் ரசிகர் நற்பணி இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் புகார் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹசன் ட்விட்டரில் தனது நற்பணி மன்றத்தினருக்கு தெரிவித்துள்ளதாவது, “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்திற்கு பெருமையே. எனினும் இயக்க வக்கீல்களின் ஆலோசனைப்படி செயல்படவும். சட்டமீறல் நம் தரப்பில் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். அதோடு, கமல்ஹாசனை ஒருமையில் விமர்சனமும் செய்ததோடு, வழக்குப் போட்டுவிடுவோம் என்று மிரட்டலும் விடுத்தனர். மேலும், வருமான வரி கட்டியது குறித்து சோதனை செய்வோம் எனவும் கமல்ஹாசனுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும், ஆதாரத்துடன் பேச வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல்ஹாசனும், ஊழல் தொடர்பான புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்புங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர் பெரம்பலூரில் மூட்டை ஊழலை அம்பலப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.