சினிமாவுக்கு முழுக்கு, முழுநேர அரசியல் : கமல்ஹாசன் அறிவிப்பு

முழுநேர அரசியல்வாதி ஆவதற்கு தயாராகிவிட்டார் கமல்ஹாசன். அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முழுநேர அரசியல்வாதி ஆவதற்கு தயாராகிவிட்டார் கமல்ஹாசன். அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதில் நடிகர் ரஜினிகாந்தைவிட நான்கு கால் பாய்ச்சலில் முன்னால் நிற்பவர் கமல்ஹாசன். அவ்வப்போது ட்விட்டர் பதிவுகள் மூலமாக தமிழக அரசை சீண்டினார். ‘ஆதாரம் இல்லாமல் கமல்ஹாசன் பேசக்கூடாது’ என அமைச்சர்கள் பலரும் இவர் மீது பாய்ந்தனர்.

உடனே தமிழகம் முழுக்க நடைபெறும் முறைகேடுகளை இ மெயில் மூலமாக அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்க மக்களுக்கு வேண்டுகோள் வைத்தார் கமல். அதற்கு என்ன ரெஸ்பான்ஸ்? என்பது தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து கமல் வைக்கும் விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் தவறாமல் பதில் அளித்தனர்.

ஒரு கட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, ‘அரசியலுக்கு வந்துவிட்டு, கமல் கேள்வி கேட்கட்டும். அதன்பிறகு பதில் சொல்கிறோம்’ என்றார். ‘இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதே அரசியலுக்கு வந்துவிட்டதாக’ அதற்கு பதில் கொடுத்தார் கமல்ஹாசன். தொடர்ந்து நீட் தேர்வு, டெங்கு என ஒரு பிரச்னை விடாமல் தமிழக அரசை விமர்சித்தார்.

கிட்டத்தட்ட எதிர்க்கட்சியாக தன்னை முன்னிறுத்துவதில் மும்முரமாக இருக்கிறார் கமல். அதனால்தான் ஒரு ட்விட்டர் பதிவில், ‘யாருமே ஏன் இந்த அரசை ராஜினாமா செய்யும்படி கேட்கவில்லை?’ என கேள்வி எழுப்பினார். ‘எனது இந்தக் குரலுக்கு எதிர்க்கட்சிகளும் துணை நிற்கவேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு முன்பாக ஒரு டஜன் முறையாவது எடப்பாடி பழனிசாமியை ராஜினாமா செய்யும்படி ஸ்டாலின் கேட்டிருந்தது தனிக்கதை!

இப்போது எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்பத் துடிக்கும் கமல்ஹாசன், திமுக.வின் வாய்ப்பை தட்டிப் பறிக்கப் பார்க்கிறாரா? அல்லது, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதை தெரிந்துகொண்டு அவரை குழப்புகிறாரா? என பலவிதமான விமர்சனங்கள் இருக்கின்றன. கமல் ஒரு விமர்சனத்தை வைப்பதும், ஆளும்கட்சி அமைச்சர்கள் முந்தியடித்து பதில் சொல்வதும் திமுக.வை அரசியல் களத்தில் பின்னுக்கு தள்ளும் முயற்சியோ? என்றும் விவாதம் நடக்கிறது.

ஆனாலும் சளைக்காத கமல்ஹாசன், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘கண்டிப்பாக அரசியலுக்கு வர இருக்கிறேன். அரசியலுக்கு வந்தபிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன். காந்திய சோசலிசம்தான் எனது கொள்கை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில் ஆங்கில சேனல்களுக்கு கமல் கொடுத்த பேட்டியில், ‘நான் வலது சாரியும் அல்ல, இடது சாரியும் அல்ல. இரண்டுக்கும் பொதுவானவன்’ என்கிற ரீதியில் கருத்து தெரிவித்தார். இது அவரது கொள்கை குறித்து பலமான விமர்சனங்களை எழுப்பியது. அதனால்தான் இப்போது, காந்திய சோசலிஸத்தை தனது கொள்கையாக குறிப்பிட்டிருக்கிறார் கமல்.

இப்போதும்கூட கமல்ஹாசன், அதிகமான சினிமாப்படங்களை கைவசம் வைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சில விளம்பர ஒப்பந்தங்களில் மட்டுமே நீடிக்கிறார். எனவே சினிமாவை துறந்துவிட்டு அரசியலுக்கு வருவது அவருக்கு பெரிய விஷயமல்ல என்கிறார்கள் கமலை அறிந்தவர்கள். ஆக, இன்னொரு ஸ்டார் அரசியல் களத்திற்கு தயாராகிவிட்டார். நடிகர் விவேக் கூறியதுபோல, மகுடம் தரிப்பது மக்களின் கைகளில்!

 

×Close
×Close