மாண்புமிகு பிரதமருக்கு கருப்பு சட்டையில் கமல் சொன்ன செய்தி!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்த்துவது என் உரிமை

மக்கள் நீதி மய்யம்  கட்சி தலைவரான கமல்ஹாசன்,  கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு பிரதமர் மோடிக்காக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பல்வேறு  எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்தார். மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியில் பங்கேற்கும் அவர், அடையாறு புற்று நோய் ஆராய்ச்சி மைய வைரவிழா கட்டடத் திறப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இந்த இரு வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மோடி  சென்னை வருகிறார் என்ற செய்தி வெளியான நாள் முதலே கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு முன்பு பலமுறை மோடி தமிழகம் வந்த போதும் எழாத எதிர்ப்பு இம்முறை இரட்டிப்பானதற்கு காரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்து வருவது, அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரிடமும் கடுமையான  கேள்விகளை எழுப்பியுள்ளது.  இந்நிலையில்,  இன்று சென்னை வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  கருப்புக் கொடி காட்டுதல், கருப்பு பலூன் பறக்க விடுதல், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்கள் என பல்வேறு போராட்டங்கள்  தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம்  தலைவருமான கமல்ஹாசன்,  கருப்புச் சட்டை அணிந்தவாறு, பிரதமர் மோடிக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், “இது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை நீங்கள் அறியாதது இல்லை. தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை.  நினைவுறுத்த்துவது என் உரிமை.இங்கே இந்த வீடியோ வடிவில் சொல்ல மறந்தைகளையும் கடித வடிவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து செயல்படுங்கள்.தயவு செய்து செயல்படுங்கள். இந்நிலை மாற வழி செய்யுங்கள். வாழ்க இந்தியா. நீங்களும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close