ஜெயேந்திரர் மறைவு: மக்கள் நீதி மய்யத்தின் ஸ்தாபகத் தலைவர் இரங்கல்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயேந்திரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

காஞ்சி சங்கரமடத்தின் 69 ஆவது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஜெயேந்திரரின் இறப்பு காஞ்சி மடத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயேந்திரருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெயேந்திரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சீபுரம் சங்கரமடத்தின் பீடாதிபதியான சங்கராச்சாரியார் மதிப்பிற்குரிய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் காலமாகிவிட்டார் என்கிற செய்தி அறிந்து வருந்துகிறோம். அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கையொப்பம் இடவேண்டிய இடத்தை ‘ஸ்தாபகத் தலைவர்’ என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close