'ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்' - கமல்ஹாசன் 'நச்'!

ஐயோ! நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கமல் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், பல கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு,

கேள்வி: ராஜீவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டேன் என ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே?
பதில்: அது அவருடைய மனித நேயம். ஆனால், நாம் கேட்பது சட்டத்தில் தளர்வு.

கேள்வி: தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை என்னால் தான் நிரப்ப முடியும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: நான் பார்க்கிறேன்… அவ்வளவு தான். அதை அவர் சொல்கிறார்… அவ்வளவு தான்.

கேள்வி: தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தைப் பற்றி விமர்சித்து வருகிறார்களே!
பதில்: அது செய்ய வேண்டியது தானே! ஏனெனில், நான் அவர்களை பற்றி மிக நேர்மையாக விமர்சனம் செய்திருக்கிறேன். நேர்மை இல்லையென்றாலும், விமர்சனம் செய்ய வேண்டியது அவர்களது மறுகடமை.

கேள்வி: காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
பதில்: செய்யலாம்… செய்யனும்.

கேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளீர்களே?
பதில்: ஆம்! நான் ஆதரவு கொடுத்திருக்கிறேன். மூன்றாவது தலைமுறையாக தொடர்ந்து இந்த குடிநீர் பிரச்சனை அங்கு நிலவி வருகிறது. ஒரு மாநில அரசு மட்டும் இதில் சம்பந்தப்பட்டு இல்லை.

கேள்வி: கிறிஸ்துவ மிஷனரிகளில் இருந்து நீங்கள் நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே?
பதில்: இதற்கு சிரிப்பதைத் தவிர நான் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தான்தோன்றித் தனமாக கதை புனைவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: பெரியார் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்?
பதில்: அது என் தந்தையின் வீடு.

கேள்வி: ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் படித்த தொடக்கப் பள்ளியில் உங்களை உள்ளே அனுமதிக்கவில்லையே. உங்கள் மனநிலை அப்போது எப்படி இருந்தது?
பதில்: அதற்காகத் தான் இப்போது ஒரு பள்ளிக்கு சென்று வந்துள்ளேன். பெரியாரின் வீடு அது.

கேள்வி: அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்லி உள்ளீர்களே?
பதில்: இருப்பதை முடித்துவிட்டு தான் விலகுகிறேன்.

கேள்வி: தமிழ்நாட்டில் இப்போது ஆளாளுக்கு கட்சி தொடங்கப் போகிறேன் என்கிறார்களே?
பதில்: கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் 2000க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

கேள்வி: இளைஞர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே?
பதில்: அவர்கள் தான் அஸ்திவாரமே!

கேள்வி: கட்சி ஆரம்பிக்கும் முன்னர் பெரியார் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை?
பதில்: நான் போகவில்லை என்று உங்களுக்கு தெரியுமா?

கேள்வி: திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை களைய கமல் முன்வருவாரா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளாரே?
பதில்: ஜி.எஸ்.டி க்கு எதிராக திரையுலகத்தில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல் என்னடையது தான்.

கேள்வி: சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சிலை வைப்பதற்கே வித்தியாசமான கருத்து உடையவன் நான். ஆனால், அதை உடைப்பது மிகக் கேவலமானது. பெரியார் இருந்திருந்தால், எதற்கு சிலை வைக்கிறீர்கள்? என்று கேட்டிருப்பார்.

கேள்வி: நேற்று வந்த கமல்ஹாசன் எங்களுக்கு அரசியல் கற்றுத் தர தேவையில்லை என்று வைகோ சொல்லி இருக்கிறாரே?
பதில்: ஐயோ! நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார். அவரிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்.

கேள்வி: அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டும் போதுமா?
பதில்: இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close