"முரசொலி" பவள விழா அழைப்பிதழில் கமல்ஹாசன் பெயர்! ரஜினி...?

திமுகவின் முரசொலி பவள விழா அழைப்பிதழில் கமல்ஹாசனின் பெயர் இடம்பெற்றுள்ளது

தமிழக அரசியல் தடத்தில் ரஜினி, கமல் என இருவருமே தற்போது ஒருசேர பயணித்து வருகின்றனர். “போர் வரும் போது பார்த்துக் கொள்வோம்” என்று சொல்லிவிட்டு ரஜினி தனது அடுத்தக்கட்ட சினிமாத் துறை சம்பந்தமான வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.

இதற்கிடையில், ‘பிக்பாஸ்’ சர்ச்சைக்கு பதில் அளிக்க வந்த கமல், போகிற போக்கில் தமிழக அரசியல் குறித்து ‘இங்கு எல்லா துறையிலும் ஊழல் இருக்கு” என்று சொல்ல, அவரைச் சுற்றி அரசியல் தீ பற்றிக் கொண்டது. இன்றுவரை அது நமத்துப் போகாமல் எரிந்தும் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அவரைச் சீண்ட, கமலும் விடாமல் பதலளித்துக் கொண்டிருக்க, தற்போது ரஜினியை அனைவரும் மறந்தே போய்விட்டனர்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், திமுக கமலுக்கு வரிந்துக் கட்டிக் கொண்டு ஆதரவளிப்பது தான். அமைச்சர்கள் கமலை நோக்கி எந்த அம்பை எய்தாலும், கமல் அதற்கு ரிப்ளை அம்பு விடுவதற்குள், ஸ்டாலின் ‘கதாயுதத்தையே’ அமைச்சர்கள் நோக்கி பறக்க விடுகிறார். இதனால், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், அமைச்சர்கள் மேலும் டென்ஷனாகி, ஸ்டாலினும் கமலும் கூட்டு சேர்ந்துக் கொண்டு எல்லாம் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி 1942 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் துவங்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் 75 வயதை எட்டும் முரசொலிக்கு திமுக பிரம்மாண்டமான பவள விழாவை கொண்டாட இருக்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இன்று வெளியாகியுள்ள இவ்விழாவிற்கான அழைப்பிதழில் கமல்ஹாசனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கமல்ஹாசனும், வைரமுத்துவும் வாழ்த்துரை வழங்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விழாவில் ரஜினியும் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியானது. ரஜினிகாந்த் ஒரு பார்வையாளராக மட்டும் இவ்விழாவில் பங்கேற்கிறார் என்று திமுக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

கமல் வாழ்த்துரை வழங்குவதால், அவர் மேடையில் அமர்வார். அதேசமயம் பார்வையாளராக ரஜினி கலந்து கொள்வதால், அவர் கீழே தான் அமர முடியும் என கூறப்பட்டது. இந்த நிலையில், அழைப்பிதழில் ரஜினின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால், பவளவிழாவில் ரஜினி பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

 

×Close
×Close