காவிரி விவகாரம்: மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்க மாட்டார்கள் - கமல்ஹாசன்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என கமல்ஹாசன் ட்வீட்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மீண்டும் தாமதம் செய்யும் மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி வழக்குகளில் இறுதி உத்தரவை கடந்த பிப்ரவரி 16-ம் தேதி பிறப்பித்த உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய நீரின் அளவில் மட்டும் மாற்றம் செய்தது. இதை அமல்படுத்த 6 வாரங்களில் ஸ்கீம் உருவாக்க கேட்டுக்கொண்டது. ஆனால் 6 வார முடிவில் மேலும் அவகாசம் கேட்ட மத்திய அரசு, ‘ஸ்கீம்’ என்பதற்கும் விளக்கம் கேட்டது.

ஆனால் ‘ஸ்கீம்’ பற்றி எதுவும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதிக்குள் தெளிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில், இன்று மத்திய அரசு சார்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவிரி செயல் திட்டம் உருவாக்க மேலும் 2 வாரம் அவகாசம் தேவை’ என கேட்கப்பட்டது.

காவிரி வழக்கில் மேலும் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

×Close
×Close