Advertisment

காஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு: கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காஞ்சிபுரம் கோவில் சிலை முறைகேடு: கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனுவிற்கு பதில் அளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் திருக்கோவில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை, சிதிலமடைந்ததாக கூறி, 2009 ஆம் ஆண்டு புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. மொத்த எடையில் 75 சதவிகிதம் தங்கத்தால் ஆன சோமாஸ்கந்தர் சிலை, அதே ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சூழலில், 2015 ஆம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலையை பார்வையிட்ட ஸ்தபதி முத்தையா, அந்த சிலையில், ஆகம விதிப்படி குறைபாடு இருப்பதாகவும், எனவே, புதிய சிலை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தார்.

இதையடுத்து, அப்போது, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையராக இருந்த கவிதா தலைமையில், சிலை வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டது. இதன்படி, மொத்த எடையில், 5.45 கிலோ தங்கத்துடன் சோமாஸ்கந்தர் சிலையை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டு, தங்கம், வெள்ளி உள்ளிட்ட சிலை செய்ய தேவையான உலோகங்கள் திரட்டப்பட்டன. பெரிய ஆலயங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடம் இருந்தும், தானமாக தங்கம் பெறப்பட்டது.

இதையடுத்து, சுவாமி மலை ஸ்தபதி மூலம் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, 2016ஆம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த உற்சவர் சிலை செய்வதற்காக பெறப்பட்ட தங்கத்திற்கு எந்த கணக்கு வழக்கும் இல்லை என்பதோடு, கோவிலில் உள்ள சிசிடிவிக்களை அகற்றவிட்டே சிலை வடிவமைப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக, அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தை அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த காஞ்சிபுர குற்றவியல் நீதிமன்றம், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய காவல்துறை உத்தரவிட்டது.

இதையடுத்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி வீரமணி தலைமையிலான குழு, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை முறைகேடு பற்றி விசாரணை நடத்தியது. சில வாரங்களுக்கு முன்பு, ஐஐடி நிபுணர் குழு மூலம், சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், 5.45 கிலோ அளவிற்கு தங்கம் இருந்திருக்க வேண்டிய நிலையில், ஒரு பொட்டுத்தங்கம் கூட சிலையில் இல்லை என, ஐஐடி நிபுணர் குழு ஆய்வில் தெரியவந்தது.

மேலும், பொதுமக்களிடம் இருந்து எவ்வளவு தங்கம் பெற்றனர் என்பது பற்றிய பதிவேட்டை பராமரிக்காமல், முறைகேடாக தங்கம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், சிலை வடிவமைக்கப்பட்ட கால கட்டங்களில், கோவிலில் உள்ள சிசிடிவிக்களை திட்டமிட்டே அகற்றிவிட்டு, தங்கத்தை தானமாக பெற்றதும், அவற்றை கொண்டு சிலை செய்யாமல், முழுக்க முழுக்க முறைகேடு செய்திருப்பதும் தெரியவந்தது. ஆகம விதிகளின்படி 86 கிலோ எடையில் செய்யப்பட்டிருக்க வேண்டிய சோமாஸ்கந்தர் சிலையை, ஒரு பொட்டுத்தங்கத்தை கூட பயன்படுத்தாமல், 111 கிலோ எடையில் செய்து, அதனை பிரதிஷ்டை செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிலையை செய்ய பரிந்துரை செய்த முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட 9 பேர் மீது சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முத்தையா ஸ்தபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

சிலை வடிவமைப்பு குழுவின் தலைவராக இருந்து, தற்போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக உள்ள கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்தாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கவிதா ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முதல் தகவல் அறிக்கையில் தன் பெயர் இல்லாத நிலையில் காவல் துறையினர் தன்னை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, கவிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரமேஷ், ஓராண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் உள்நோக்கத்துடன் கைது செய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் மனுதரார் பெயர் இல்லாத நிலையில் காவல்துறை தவறாக கைது செய்துள்ளனர் வாதிட்டார்.

மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனுதரார்க்கு சமீபத்தில் தான் கண் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும், எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

அப்போது நீதிபதிகள் கடந்த ஆண்டு பதிவு செய்த வழக்கில், தற்போது அவசரமாக கைது செய்வது ஏன்? என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் இடைக்கால ஜாமீன் வழங்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், ஓராண்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்தது ஏன் என வரும் 3 ஆம் தேதி பதிலளிக்கும் படி, காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment