Advertisment

திருச்செந்தூரில் முருக பக்தர்கள் குவிகிறார்கள் : கந்தசஷ்டி விழா நாளை தொடக்கம்

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அங்கு முருக பக்தர்கள் குவிகிறார்கள். சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanda shasti, tiruchendur, jeyanthinadhar, murugan, tiruchendur subramaniaswami koil, tamilnadu hindu religious and charitable endowments department

திருச்செந்தூரில் நாளை கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. இதையொட்டி அங்கு முருக பக்தர்கள் குவிகிறார்கள். சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

Advertisment

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்! இங்கு வருடம்தோறும் பல விழாக்கள் நடக்கின்றன. அவற்றில் முக்கிய திருவிழா, கந்தசஷ்டி! இந்த விழா இந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

கந்த சஷ்டியையொட்டி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

கந்த சஷ்டியின் 1–ம் திருநாள் முதல் 5–ம் திருநாள் வரையிலும் மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

2–ம் திருநாள் முதல் 5–ம் திருநாள் வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை, மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1–ம் திருநாள் முதல் 6–ம் திருநாள் வரையிலும் மதியம் யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியங்களுடன் சுவாமி சண்முகவிலாசம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6–ம் திருநாளான 25–ந் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

அன்று மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.

மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. பின்னர் சந்தோ‌ஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி– அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள். இரவில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று, சஷ்டி பூஜை தகடுகள் கட்டுதல் நடைபெறும்.

7–ம் திருநாளான 26–ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 9 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி–அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11.45 மணிக்கு சுவாமி– தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.

8–ம் திருநாளான 27–ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். 9–ம் திருநாளான 28–ந் தேதி (சனிக்கிழமை) முதல் 11–ம் திருநாளான 30–ந் தேதி (திங்கட்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

12–ம் திருநாளான 31–ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, சுவாமி– அம்பாள் திருவீதி உலா சென்று கோவில் சேர்கிறார்கள். விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

கந்த சஷ்டி விழாவையொட்டி முன்கூட்டியே திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். முருக பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் பல இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

 

Tiruchendur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment