‘நான் கனிமொழி பேசுறேன்’ தொண்டரின் பிறந்த நாளுக்கு ஸ்வீட் ஷாக்!

தொண்டர்கள் பதவிக்காக திமுக.வில் இல்லை. கலைஞர், தளபதி, அக்கா கனிமொழி ஆகியோரின் உடன்பிறப்பு என்பதுதான் எங்களுக்கு பெரிய பதவி!” என்றார் நெகிழ்ச்சியாக!

By: Updated: December 29, 2017, 02:34:52 PM

திமுக.வில் பொறுப்பிலேயே இல்லாத எளிமையான தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திடீரென அவர்களின் பிறந்த நாளில் போனில் பிடித்து வாழ்த்து கூறுவது ஆகியவற்றை ஒரு நடைமுறையாக வைத்திருக்கிறார், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி.

senthil மடிப்பாக்கம் செந்தில்

டிசம்பர் 26-ம் தேதி காலையில் ஒரு சுவாரசிய நிகழ்வு..! நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையில் சி.ஐ.டி. காலனி இல்லத்தில் இருந்து காரில் கிளம்பிச் செல்கிறார் கனிமொழி. போகிற வழியில் செல்போனிலேயே வாட்ஸ் அப் மற்றும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் சேர்ந்த தகவல்களை ‘செக்’ செய்கிறார்.

அப்போது அவ்வப்போது அவர் கண்களில் படுகிற திமுக தொண்டர் ஒருவரின் பிறந்தநாள் அன்றுதான் (டிசம்பர் 26) என தெரிய வருகிறது. அடுத்த சில வினாடிகளில் அந்தத் தொண்டரின் போன் எண்ணை தனது உதவியாளரிடம் கேட்டு வாங்குகிறார். உடனே கனிமொழியே அந்த தொண்டருக்கு செல்போனில் நம்பரைத் தட்டுகிறார்.

எதிரே போனை எடுத்தவர் ‘ஹலோ’ சொல்லவும், ‘உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!’ என்கிறார் கனிமொழி. இவரது குரலை அந்தத் தொண்டரால், உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. ‘நீங்க யாரும்மா?’ என்கிறார் அவர். ‘நீங்க செந்தில்தானே?’ என இவர் கேட்க, அவர் மறுபடியும், ‘நான் செந்தில்தான், நீங்க யாரு?’ என கேட்டார்.

அதன்பிறகு, ‘நான் கனிமொழி பேசுகிறேன். இன்று உங்களுக்கு பிறந்த நாள்தானே! உங்களுக்கு வாழ்த்துகள்!’ என மீண்டும் கூறுகிறார் கனிமொழி. அதன்பிறகு, ‘அக்கா, அக்கா, நீங்களா…!’ என திக்கு முக்காடிப் போனார் செந்தில். அதற்கு மேல் அவரிடம் வார்த்தைகளே இல்லை. ‘ஓண்ணுமில்லை. உங்க பிறந்த நாள்னு தெரிஞ்சது. பேசினேன். அப்புறம் பார்க்கலாம்’ என கனிமொழியே விடை கொடுத்திருக்கிறார்.

மேற்படி செந்தில், சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர்! திமுக.வில் எந்தப் பொறுப்பிலும் அவர் கிடையாது. ஆனாலும் அவரது ஏரியாவில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இவரது மனைவிக்கு கவுன்சிலர் சீட் கொடுக்க கட்சி முன்வந்தபோதும், ‘பதவியில்லாமல் பணியாற்றுகிறேன்’ எனக் கூறி மறுத்திருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய செந்தில், ‘சாதாரணத் தொண்டர்களின் வீடுகளில் நடைபெறும் சுக, துக்க நிகழ்ச்சிகளில் அழைக்காமலேயே அக்கா (கனிமொழி) சென்று கலந்து கொள்ளக்கூடியவர் என்பதை நான் அறிவேன். ஆனால் இப்படி திடுதிப்பென என் பிறந்த நாளை தெரிந்து, அவராகவே வாழ்த்து கூறுவார் என எதிர்பார்க்கவில்லை. அந்தப் பதற்றத்தில் நன்றி சொல்லக்கூட எனக்கு தோன்றவில்லை.

ஓரிரு நிகழ்ச்சிகளில் பார்த்தாலே ஒரு தொண்டரை நினைவில் வைத்து, பெயர் கூறி அழைக்கும் பாங்கு கலைஞருக்கு உண்டு என கேள்விப்பட்டிருக்கிறோம். அதே நினைவாற்றலையும் கனிவையும் கனிமொழி அக்காவிடமும் பார்க்கிறோம். எங்களைப் போன்ற தொண்டர்கள் பதவிக்காக திமுக.வில் இல்லை. கலைஞர், தளபதி, அக்கா கனிமொழி ஆகியோரின் உடன்பிறப்பு என்பதுதான் எங்களுக்கு பெரிய பதவி!” என்றார் நெகிழ்ச்சியாக!

எத்தனை தோல்விகளை எதிர்கொண்டாலும், திமுக.வின் வேர் உயிரோட்டமாக இருப்பது அந்த உடன்பிறப்பு உறவுகளால்தான்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Kanimozhi birthday wishes dmk cadre

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X